ஓய்வூதியம் என்ன பிச்சையா? கொதிக்கும் அரசு அலுவலர் ஒன்றியம்

விகடன்  விகடன்
ஓய்வூதியம் என்ன பிச்சையா? கொதிக்கும் அரசு அலுவலர் ஒன்றியம்

 

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் சார்பில் 7-வது ஊதியக்குழு விளக்கக் கூட்டம் கரூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய மாநிலத் தலைவர் இரா.சண்முகராஜன், "கால மாற்றம், விலைவாசி உயர்வு போன்றவற்றைக் கருத்தில்கொண்டு ஊதியக்குழு சம்பள விகிதத்தை நிர்ணயம் செய்கிறது. மூக்குக் கண்ணாடி, பார்கர் பேனா, கால்குலேட்டர் வாங்க அரசிடம் கடன் (முன்பணம்) வாங்கியது ஒரு காலம். இப்போது கார், கம்ப்யூட்டர் வாங்குவற்கு கடன் வழங்கப்படுகிறது. அதனால், இன்றைய தேவைக்குத் தகுந்ததுபோல் ஊதியத்தை அவரவர் தகுதிக்கேற்ப வழங்கும் வகையில் ஊதியக்குழுவிடம் அறிக்கை அளித்துள்ளோம்.

கடந்த மாதம் அரசு ஊழியர் சங்கத்தினர் அழைப்பு விடுத்த வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு 2 ஆயிரம் பேர் கூட வரவில்லை. ஆனால், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் சார்பில் நடைபெற்ற மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் 24 ஆயிரத்துக்கும் அதிகமான அரசுப் பணியாளர்கள் கலந்து கொண்டார்கள். நம்முடைய இந்த எழுச்சியையும், ஒற்றுமையும் கண்டு இந்த அரசு பயப்படுகிறது. இவ்வளவு பேர் ஆர்வமுடன் வந்திருந்ததால் திகைத்துப் போனது. ஓய்வூதியம் என்பது அரசாங்கம் நமக்குக் கொடுக்கும் பிச்சை அல்ல. அது அரசுப் பணியாளர்களுக்கான சமூக அந்தஸ்து. எதிர்காலத்துக்கான ஆணிவேர். அதனால், பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியம் வழங்கும் வரை நமது போராட்டம் தொடரும்" என்று எச்சரித்தார்.

மூலக்கதை