சத்தியமா நம்புங்க! : இந்த கிராமத்திற்கு தற்போது தான் மின்சாரம் கிடைத்துள்ளது....

தினமலர்  தினமலர்
சத்தியமா நம்புங்க! : இந்த கிராமத்திற்கு தற்போது தான் மின்சாரம் கிடைத்துள்ளது....

கோவை : நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆனநிலையில், இந்தியா பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைந்துள்ளது. இதனிடையே, தமிழகத்தில் உள்ள ஒரு குக்கிராமத்திற்கு தற்போது தான் மின்சார வசதியே கிடைத்துள்ளது என்பதை நம்பமுடிகிறதா!!!
கோவை மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் அதிகம் வசிக்கும் கிராமமான செம்புக்கரைக்கு கடந்த சனிக்கிழமை ( ஜூன் 17ம்) தேதி தான் முதன்முறையாக மின்சார வசதி அளிக்கப்பட்டுள்ளது. இப்பகுதி மக்கள், தற்போது தான் மின்சார பல்பு ஒளிர்ந்ததையே நேரில் பார்த்திருக்கிறார்கள்....

மலைப்பகுதி கிராமங்களான செம்புக்கரை மற்றும் தூமானூர் பகுதிகளுக்கு மி்னசார வசதி வழங்க கடந்த 4 ஆண்டுகளுக்கு முன், மின்சார வாரியத்தால் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அது எடுத்தஎடுப்பிலேயே கிடப்பில் போடப்பட்டது. பின் கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ. ஆறுகுட்டியின் நடவடிக்கைகளால், கடந்த ஜனவரி மாதம் இந்த ஒப்பந்தம் மீண்டும் உயிர்பெற்றது. 200 குடும்பங்கள் வசித்து வரும் இந்த கிராமங்களில், நான்கில் ஒருபகுதி மக்களுக்கு தான் தற்போது மின்சார வசதி செய்து தரப்பட்டுள்ளது.
தமிழக அரசு இலவசமாக வழங்கிவரும் இலவச டி.வி. மிக்சி, பேன், கிரைண்டர் உள்ளிட்டவைகள் இப்பகுதி மக்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தாலும், மின்சார வசதி இல்லாததனால், பல ஆண்டுகளாக அவைகள் இவர்களது வீட்டினும் வெறும் காட்சிப்பொருளாகவே இருந்து வந்துள்ளன.
காட்டு யானைகள் அதிகம் நடமாடும் பகுதி என்பதால் மி்ன்கம்பங்கள் நடுவதில் பிரச்னைகள் உள்ளிட்ட காரணங்களால், இப்பகுதிகளில் மின்சார வசதி ஏற்படுத்த காலதாமதம் ஆனதாகவும், தற்போது பணிகள் துவங்கப்பட்டு துரிதகதியில் நடைபெற்று வருவதால், எஞ்சிய பகுதிகளுக்கும் மிகவிரைவில் மின்வசதி செய்து தரப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை