விமானத்தில் பயணம் செய்யும்போது ரகளையில் ஈடுபடும் பயணிகளுக்கு வாழ்நாள் தடை மற்றும் அபராதம்: புதிய விதிமுறை அடுத்த மாதம் முதல் அமல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
விமானத்தில் பயணம் செய்யும்போது ரகளையில் ஈடுபடும் பயணிகளுக்கு வாழ்நாள் தடை மற்றும் அபராதம்: புதிய விதிமுறை அடுத்த மாதம் முதல் அமல்

புதுடெல்லி: விமானத்தில் ரகளையில் ஈடுபடும் பயணிகளுக்கு அபராதம் மற்றும் வாழ்நாள் முழுவதும் விமானத்தில் பயணம் செய்ய தடை உள்ளிட்ட புதிய விதிமுறைகள் அடுத்த மாதம் அமலாகும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. டெல்லியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சிவசேனா எம்பி ரவீந்திர கெய்க்வாட் ஏர் இந்தியா அதிகாரியை செருப்பால் அடித்த சம்பவம் நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து அவருக்கு விமானத்தில் பறக்க அனைத்து விமான நிறுவனங்களும் தடை விதித்தன. அவர் பகிரங்க மன்னிப்பு கோரியதை அடுத்து தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.



இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விசாகபட்டினத்தில் ஆந்திரா மாநிலத்தின் தெலுங்கு தேச எம்பி திவாகர் ரெட்டி விமான நிலையத்தில் ரகளையில் ஈடுபட்டார். அங்குள்ள பொருட்களையும் அடித்து உடைத்து சூறையாடினார்.

இந்த காட்சிகள் அனைத்தும் அங்குள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவானது. இதுகுறித்து விசாரணை நடைபெறும் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ அறிவித்தார்.
ஏர் இந்தியா உள்ளிட்ட 7 விமான நிறுவனங்கள் திவாகர் ரெட்டிக்கு தடை விதித்துள்ளன.

இந்த சூழலில் இது போன்று ரகளையில் ஈடுபடும் பயணிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் புதிய விதிமுறைகளை அமல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இதுகுறித்து மத்திய விமான போக்குவரத்து துறை செயலாளர் ஆர். என்.

சவுபே கூறுகையில், விமானம் மற்றும் விமான நிலையத்தில ரகளையில் ஈடுபடும் பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக புதிய விதிமுறைகள் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளன. இது போன்ற ரகளையில் ஈடுபடும் பயணிகளுக்கு அவர்களது குற்றங்களுக்கு ஏற்ற வகையில் 3 மாதம் முதல் வாழ்நாள் வரை விமானத்தில் பறப்பதற்கு தடை விதிக்கப்படும்.

மேலும் அபராதம் விதிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் அடுத்த மாதம் முதல் அமலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

.

மூலக்கதை