இந்தியர்கள் முதலீடு செய்வது குறைந்துள்ளது: சுவிஸ் வங்கிகள் தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
இந்தியர்கள் முதலீடு செய்வது குறைந்துள்ளது: சுவிஸ் வங்கிகள் தகவல்

புதுடெல்லி: சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் முதலீடு செய்வது குறைந்துள்ளதாக அந்நாட்டு வங்கிகள் தெரிவித்துள்ளன. சுவிஸ் உள்ளிட்ட வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்பதற்கு மத்திய அரசு படாதபாடு படுகிறது.

இதற்காக சுப்ரீம் கோர்ட் மேற்பார்வையில் விசாரணை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் சுவிஸ் நாட்டில் இந்தியர்கள் செய்துள்ள டெபாசிட் விவரங்கள் குறித்து பட்டியல் அளிக்க அந்நாட்டு வங்கிகள் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையடுத்து 2019க்குள் இது தொடர்பான அனைத்து விவரங்களும் மத்திய அரசுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். ஆனால் அதே நேரத்தில் இவற்றின் ரகசிய தன்மை பாதிக்கப்பட கூடாது என சுவிஸ் வங்கிகள் வலியுறுத்தியுள்ளன.இதுகுறித்து சுவிஸ் வங்கிகள் சங்க நிர்வாகி ஜான் லான்னோ நிருபர்களிடம் கூறுகையில், கடந்த 2015ம் ஆண்டு இறுதியில் சுவிஸில் உள்ள தனியார் வங்கிகளில் இந்தியர்களின் டெபாசிட் தொகை ரூ. 8 ஆயிரத்து 392 கோடியாக குறைந்து விட்டது. 97க்கு பிறகு இந்தியர்களின் டெபாசிட் குறைவது இதுவே முதன்முறை.

2006ம் ஆண்டு இந்தியர்களின் டெபாசிட் ரூ. 23 ஆயிரம் கோடியாக காணப்பட்டது. இதுதான் மிகவும் அதிகபட்சமாகும்.

பின்னர் அது படிப்படியாக குறைந்தது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக ஆசிய நாடுகளில் ஹாங்காங், சிங்கப்பூர் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் தான் அதிகம் டெபாசிட் செய்துள்ளனர் என்றார்.

சுவிஸ் உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பண பட்டியலை பெறுவதற்கான மத்திய அரசின் முயற்சியும் இது போன்ற முதலீடுகள் குறைவதற்கு ஒரு காரணம் என்றும் சொல்லப்படுகிறது.

.

மூலக்கதை