கடைசி தடையை வெற்றிகரமாக கடந்து கோப்பையை இந்தியா தக்க வைக்கும்: ரோகித் சர்மா நம்பிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
கடைசி தடையை வெற்றிகரமாக கடந்து கோப்பையை இந்தியா தக்க வைக்கும்: ரோகித் சர்மா நம்பிக்கை

பர்மிங்ஹாம்: பர்மிங்ஹாம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நேற்று நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2வது அரையிறுதியில், நடப்பு சாம்பியன் இந்தியா 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது. முதலில் பேட் செய்த வங்கதேசம் 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்தது.

தமீம் இக்பால் 70, முஸ்பிகூர் ரகீம் 61 ரன்கள் எடுத்தனர். புவனேஸ்வர் குமார், பும்ரா, கேதர் ஜாதவ் தலா 2, ஜடேஜா 1 விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் பேட் செய்த இந்தியா 40. 1 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் எடுத்து வென்றது. ஷிகார் தவான் 46 ரன்களில் மோர்டசா பந்தில் ஆட்டமிழந்தார்.

ரோகித் சர்மா 123, கோஹ்லி 96 ரன்களுடன் களத்தில் இருந்தனர். வரும் 18ம் தேதி நடைபெறும் இறுதி போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானுடன் இந்தியா மோதுகிறது.    வெற்றி குறித்து கேப்டன் கோஹ்லி கூறுகையில், ‘9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெல்வோம் என எதிர்பார்க்கவில்லை.

இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் தரத்தை இது வெளிப்படுத்துகிறது. கேதர் ஜாதவ் புத்திசாலி வீரர்.



எந்த வகையான ஆடுகளம் வழங்கப்படுகிறது, பந்தை எங்கே பிட்ச் செய்ய வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு போதிய வாய்ப்பு கிடைக்காததை பற்றி அதிகம் கவலைப்பட வேண்டியதில்ைல.

பயிற்சியின்போது அவர்கள் பந்தை சிறப்பாக விளாசுகின்றனர்’ என்றார். ஆட்ட நாயகன் விருது வென்ற ரோகித் சர்மா கூறுகையில், ‘நாம் சதம் விளாசி அணி வெற்றி பெறும் நிகழ்வு எப்போதும் மனதில் நிலைத்திருக்கும்.

முடிந்தவரை மிகவும் ஆழமாக பேட் செய்ய வேண்டும் என எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். அனைத்து தடைகளையும் கடந்து விட்டோம்.

பாகிஸ்தானுக்கு எதிராக இன்னும் ஒரே ஒரு தடை உள்ளது. இது மிகப்பெரிய போட்டியாக இருக்கப்போகிறது என்பதை உணர்ந்துள்ளோம்.

அதையும் வெற்றிகரமாக கடந்து கோப்பையை தக்க வைப்போம் என்ற நம்பிக்கையுள்ளது.

சூழ்ச்சியான பீல்டிங் வியூகங்களை அமைப்பது, சரியான நேரத்தில் பந்து வீச்சில் மாற்றங்களை செய்வது என களத்தில் ஒரு கேப்டனாக கோஹ்லி சிறப்பாக செயல்படுகிறார்’ என்றார்.

.

மூலக்கதை