பாகிஸ்தானுக்கு எதிரான பைனல் சவால் நிறைந்ததாக இருக்கும்: இந்திய அணி கேப்டன் கோஹ்லி

தமிழ் முரசு  தமிழ் முரசு
பாகிஸ்தானுக்கு எதிரான பைனல் சவால் நிறைந்ததாக இருக்கும்: இந்திய அணி கேப்டன் கோஹ்லி

லண்டன்: மினி உலக கோப்பை என வர்ணிக்கப்படும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் ஒரு சாதாரண போட்டியில் விளையாடினாலே எதிர்பார்ப்புகள் ஏகத்துக்கும் எகிறி கிடக்கும்.

இவ்விரு அணிகளும் சாம்பியன்ஸ் டிராபியின் சாம்பியனை தீர்மானிக்கும் இறுதி போட்டியில் நாளை மறு நாள் (18ம் தேதி) மோதவுள்ளதால் பெரிய அளவிலான எதிர்பார்ப்பு நிலவுகிறது. ரசிகர்களை பொறுத்த வரை இது வெறும் கிரிக்கெட் போட்டியாக இருக்க போவதில்லை.

அவர்களை பொறுத்தவரை இது இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர்தான். பர்மிங்ஹாமில் இருந்து இறுதி போட்டி நடைபெறும் லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்திற்கு இந்திய படை இன்று பயணிக்கிறது.   2000, 2002, 2013 வரிசையில் 4வது முறையாக இந்தியா இறுதி சுற்றுக்குள் அடியெடுத்து வைத்துள்ளது.

4 முறை இறுதி போட்டிக்கு முன்னேறிய ஒரே அணி இந்தியா மட்டுமே. இதில், 2002 (மழையால் போட்டி ரத்து செய்யப்பட்டதால் இலங்கையுடன் இணைந்து இணை சாம்பியன்), 2013 தொடர்களில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

சர்ப்ராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணியோ முதல் முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.

 ஐசிசி தொடர் ஒன்றின் இறுதி போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் யுத்தம் புரியவிருப்பது இது 2வது முறை.

முன்னதாக 2007 டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில், 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா மகுடம் சூடியது.

சாம்பியன்ஸ் டிராபியை பொறுத்தவரை இரு அணிகளும் 4 போட்டிகளில் மோதியுள்ளன. இதில், இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.

சாம்பியன்ஸ் டிராபியில் 2-1 என்ற பாகிஸ்தானின் முன்னிலையை நடப்பு தொடரின் முதல் லீக் போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் இந்தியா 2-2 என சமனுக்கு கொண்டு வந்தது. வங்கதேசத்திற்கு எதிரான அரையிறுதியில் வெற்றி பெற்ற பின், பாகிஸ்தானுக்கு எதிரான இறுதி போட்டி குறித்த கேள்விக்கு இந்திய கேப்டன் கோஹ்லி சுருக்கமாகவே பதிலளித்தார்.

‘பாகிஸ்தான் பற்றிய எந்த சிந்தனையும் இல்லை. ஆனால் நடப்பு தொடரில் பாகிஸ்தானின் சிறப்பான செயல்பாடுகள் என்னை ஈர்த்துள்ளது.

பாகிஸ்தானுக்கு மரியாதை கொடுக்கப்பட வேண்டும். இறுதி போட்டியில் நிச்சயம் அவர்கள் கடுமையான போட்டியை வழங்குவார்கள்.

எனவே இறுதி போட்டி சவால் நிறைந்ததாக இருக்கும். ஆனால் இதற்காக அணியில் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்பதெல்லாம் கிடையாது.

இதுவரை விளையாடிய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலே போதுமானதுதான்’ என்றார்.

.

மூலக்கதை