இரட்டை இலை சின்னம் யாருக்கு? தீபா அணி சார்பிலும் தேர்தல் கமி‌ஷனிடம் பிரமாண பத்திரங்கள் தாக்கல்

PARIS TAMIL  PARIS TAMIL
இரட்டை இலை சின்னம் யாருக்கு? தீபா அணி சார்பிலும் தேர்தல் கமி‌ஷனிடம் பிரமாண பத்திரங்கள் தாக்கல்

இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரி, தீபா அணியினரும் தேர்தல் கமி‌ஷனிடம் 52 ஆயிரம் பிரமாண பத்திரங்களை நேற்று தாக்கல் செய்தனர்.
சின்னம் யாருக்கு?

ஜெயலலிதாவின் மரணத்தைத் தொடர்ந்து, அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டதால் அக்கட்சியின் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் கமி‌ஷன் முடக்கி வைத்து உள்ளது.

இதன் காரணமாக, யார் உண்மையான அ.தி.மு.க.? என்பதை நிரூபித்து சின்னத்தை பெற வேண்டிய சூழ்நிலை உருவாகி இருக்கிறது. இதற்காக தேர்தல் கமி‌ஷன் உத்தரவுக்கு இணங்க, சசிகலா தலைமையிலான அ.தி.மு.க. (அம்மா) அணியினரும், முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) அணியினரும் போட்டி போட்டு கட்சி நிர்வாகிகளின் பிரமாண பத்திரங்களை டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் கமி‌ஷனிடம் தாக்கல் செய்து வருகிறார்கள்.

அ.தி.மு.க. (அம்மா) அணியின் சார்பில் இதுவரை 3 லட்சத்து 98 ஆயிரத்து 632 பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.
புரட்சித்தலைவி (அம்மா) அணி

இந்த நிலையில் நேற்று, அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) அணி சார்பில் 1 லட்சத்து 70 ஆயிரம் பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த அணி சார்பில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, டாக்டர் மைத்ரேயன் எம்.பி., முன்னாள் எம்.பி. மனோஜ்பாண்டியன், வக்கீல் பாபு முருகவேல் ஆகியோர் இந்த பத்திரங்களை தாக்கல் செய்தனர்.

முன்னதாக, பிரமாண பத்திரங்களை ஏற்றி வந்த வாகனத்தை தேர்தல் கமி‌ஷன் அலுவலக வளாகத்திற்குள் பாதுகாவலர்கள் அனுமதிக்காததால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து டாக்டர் மைத்ரேயன் எம்.பி. சிறிதுநேரம் தர்ணாவில் ஈடுபட்டார். அதைத்தொடர்ந்து உடனே அனுமதி வழங்கப்பட்டது.
தீபா பேரவை

இந்த நிலையில், எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையினரும் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரி தேர்தல் கமி‌ஷனிடம் நேற்று 52 ஆயிரம் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தனர். இதற்காக அந்த பேரவையின் தலைமை செய்தித்தொடர்பாளர் பசும்பொன் பாண்டியன், கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் செந்தில் முருகன் உள்ளிட்டோர் தேர்தல் கமி‌ஷன் அலுவலகத்துக்கு வந்து இருந்தனர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், ‘‘நாங்கள் தற்போது 52 ஆயிரம் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்து இருக்கிறோம். மேலும் லட்சக்கணக்கான பத்திரங்கள் தயாராகி வருகிறது. அதை தாக்கல் செய்ய ஒரு வாரம் காலம் அவகாசம் கேட்டு இருக்கிறோம். வாய்ப்பு அளிப்பதாக தலைமை தேர்தல் கமி‌ஷனர் நசீம் ஜைதி கூறி இருக்கிறார். அ.தி.மு.க. சட்ட விதிப்படி தொண்டர்கள்தான் பொதுச்செயலாளரை தேர்ந்து எடுக்க முடியும். அ.தி.மு.க. கிளைக்கழகங்கள் எங்களிடம்தான் உள்ளன. பொதுச்செயலாளர் தேர்தலை தேர்தல் ஆணையமே நடத்த வேண்டும் என்று தேர்தல் கமி‌ஷனரிடம் கேட்டு இருக்கிறோம். இரட்டை இலை சின்னத்தையும், கொடியையும் நாங்கள் பயன்படுத்த உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டு இருக்கிறோம்’’ என்றனர்.
விளையாட்டுத்தனமாக செயல்

இதுபற்றி அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) அணியைச் சேர்ந்த கே.பி.முனுசாமியிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர்.

அப்போது அவர் கூறுகையில், ‘‘எங்கள் அணியின் சார்பில் இதுவரை 3 லட்சம் பிரமாண பத்திரங்களை தேர்தல் கமி‌ஷனிடம் தாக்கல் செய்து உள்ளோம். இன்னும் 5 லட்சம் உறுப்பினர்களின் பிரமாண பத்திரங்களை விரைவில் தாக்கல் செய்வோம். இதில் எந்த வகையிலும் தொடர்பு இல்லாத தீபா அணியினர் யாருக்காக, எதற்காக பிரமாண பத்திரங்களை கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. தீபா பேரவை அ.தி.மு.க. சார்பு அணி அல்ல. எனவே, அவர்களது செயலை விளையாட்டுத்தனமான செயலாக நினைக்கிறோம்’’ என்றார்.

மூலக்கதை