இங்கிலாந்து தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை இல்லை தெரசா மே மீண்டும் பிரதமராவாரா?: தொங்கு நாடாளுமன்றம் அமைகிறது

தமிழ் முரசு  தமிழ் முரசு
இங்கிலாந்து தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை இல்லை தெரசா மே மீண்டும் பிரதமராவாரா?: தொங்கு நாடாளுமன்றம் அமைகிறது

லண்டன்: இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் தெரசா மே மீண்டும் பிரதமராவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இங்கிலாந்தில் தற்போது பிரதமராக தெரசா மே பதவி வகித்து வருகிறார். ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக வேண்டும் என கடந்த ஆண்டு இங்கிலாந்து மக்கள் விரும்பிய சூழலில் அப்போது பிரதமராக இருந்த டேவிட் கேமரூன் உறுப்பினராக தொடர வேண்டும் என விருப்பம் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக நடத்திய பொது வாக்கெடுப்பில் பெரும்பாலான மக்கள் ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து விலக வேண்டும் என வாக்களித்தனர். டேவிட் கேமரூன் தரப்புக்கு ஆதரவு இல்லாததையடுத்து அவர் பதவியில் இருந்து விலகினார்.

இதையடுத்து அவரது கட்சியைச் சேர்ந்த தெரசா மே பிரதமரானார். இந்நிலையில் இங்கிலாந்தில் 2020ல் தான் நாடாளுமன்ற தேர்தல் நடத்த வேண்டும்.

ஆனால் தற்போது ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து விலகுவது  தொடர்பான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை வருகிற 19ம் தேதி நடக்கிறது. எனவே அதற்கு முன்னதாக நாட்டில் வலிமையான ஆட்சி நிலவ வேண்டும் என்று கருதிய தெரசா மே ஆட்சியை கலைத்து விட்டு தேர்தலை சந்திக்க முடிவு செய்தார்.

இவரது முடிவுக்கு இங்கிலாந்து நாடாளுமன்றமும் ஒப்புதல் அளித்தது.

இதையடுத்து தேர்தல் அறிவிக்கப்பட்டு நேற்று நள்ளிரவு 2. 30 மணி வரை வாக்குபதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த தெரசா மேவுக்கு தொழிலாளர் கட்சியின் ஜெர்மி கார்பின் ஆகியோருக்கு இடையேதான் கடும் போட்டி நிலவியது.

மொத்தமுள்ள 650 தொகுதிகளில் நேற்று வாக்குபதிவு முடிந்தவுடன் உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் தொழிலாளர் கட்சி முன்னிலை வகித்தது.

இதையடுத்து படிப்படியாக ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு ஆதரவு பெருகியதையடுத்து படிப்படியாக முன்னிலை பெற தொடங்கியுள்ளது. இன்று காலை நிலவரப்படி மொத்தமுள்ள 650 இடங்களில் 639 இடங்களுக்கான முடிவுகள் வெளியாகின.

இதில் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி 310 இடங்களையும், தொழிலாளர் கட்சி 260இடங்களையும் கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்து தேசிய கட்சி 34, லிபரல் டெமாக்ரட்டிக் கட்சி 12, டெமாக்ரடிக் யூனியன் கட்சி 10, சின்பெயின் கட்சி 7, பிளாட் சிம்ரு 4, இதர கட்சிகள் 2 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

சுமார் 4. 75 கோடி வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களித்தனர். இதில் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு 46 சதவீதமும், தொழிலாளர் கட்சிக்கு 39 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளன.

மெஜாரிட்டி பலத்திற்கு 326 தேவை ஆக உள்ளது.   தற்போது உள்ள சூழலில் தெரசா மேவின் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு மெஜாரிட்டி கிடைக்க வாய்ப்பு இல்லை.

எனவே கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் அதிக இடங்களை பிடித்த கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சி அமைக்கும். இதனால் தெரசா மே மீண்டும் பிரதமராவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தெரசா மே தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால் தார்மிக பொறுப்பேற்று தெரசா மே பதவி விலகவும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அவ்வாறு அவர் விலகினால், கன்சர்வேட்டிவ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளது.

இதன் காரணமாக கன்சர்வேட்டிவ் கட்சியில் பரபரப்பு நிலவி வருகிறது. அடுத்த பிரதமர் யார் என்பது இன்று மாலை அல்லது நாளை தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் முடிவுகள் ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து விலகும் முடிவையும் பாதிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் இங்கிலாந்து அரசியல் களத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

.

மூலக்கதை