அமெரிக்காவில் தொடரும் பயங்கரம் இந்திய வாலிபர் மீது துப்பாக்கி சூடு: மர்ம நபர்கள் வெறிச்செயல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
அமெரிக்காவில் தொடரும் பயங்கரம் இந்திய வாலிபர் மீது துப்பாக்கி சூடு: மர்ம நபர்கள் வெறிச்செயல்

கலிபோர்னியா: அமெரிக்காவில் மீண்டும் இந்திய வாலிபர் ஒருவர் சுடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் டிரம்ப் அதிபராக பதவி யேற்ற பிறகு வெளிநாட்டினர் அமெரிக்காவில் குடியேற பல்வேறு கட்டுப்பாடுகளை அமெரிக்க அரசு விதித்து வருகிறது.

இதையடுத்து இந்தியர்களுக்கு எதிரான இன வெறுப்பு காரணமாக பல்வேறு மாகாணங்களிலும் இந்தியர்கள் அடுத்தடுத்து தாக்கப்பட்டும், கொல்லப்பட்டும் வந்தனர். இதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இந்த சூழலில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மீண்டும் இந்திய வாலிபர் சுடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானாவின் சங்காரெட்டி மாவட்டத்தை சேர்ந்தவர் முபீன் அகமது (26).

இவர் கடந்த 2015ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா சென்றார்.

அங்குள்ள பல்கலையில் மேற்படிப்பு படித்து வருகிறார்.

மேலும் கடை ஒன்றில் பகுதி நேரமாக வேலையும் பார்த்து வருகிறார். கடந்த 4ம் தேதி மாலை 6 மணி அளவில் மர்ம நபர்கள் சிலர் சுட்டதில் முபீன் அகமது படுகாயமடைந்தார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த தகவல் அவரது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது.

தங்களது மகனுக்கு உதவும்படி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா மற்றும் இந்திய தூதரகத்திற்கும் அவரது பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் தெலங்கானாவைச் சேர்ந்த னிவாஸ் என்ற இன்ஜினியர் கான்சாசில் சுட்டு கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை