ஷாங்காய் மாநாட்டில் சீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஷாங்காய் மாநாட்டில் சீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு

அஸ்தானா: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. இந்த அமைப்பில் இந்தியா, பாகிஸ்தான் ஆகியவை உறுப்பினர்களாக சேர நீண்டகாலமாக முயற்சிகளை மேற்கொண்டு வந்தன.

இதன் பலனாக இருநாடுகளையும் உறுப்பினர்களாக சேர்த்து கொள்ள ஷாங்காய் அமைப்பு முடிவு செய்துள்ளது. இந்நிலையில், கஜகஸ்தானின் அஸ்தானா நகரில் 2 நாட்கள் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று பிரதமர் மோடி சென்றார்.

அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.   கஜகஸ்தான் நாட்டு அதிபர் நுர்சுல்தானை, பிரதமர் மோடி சந்தித்தார். வர்த்தகம், பொருளாதாரம், கல்வி, சுற்றுலா துறைகளில் இருநாடுகளின் பங்களிப்பு குறித்தும், தீவிரவாத தடுப்பு பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மாநாட்டில் கலந்துகொள்ள வந்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை நேற்று இரவு சந்தித்த மோடி, அவரிடம் நலம் விசாரித்தார். இந்தியா-பாகிஸ்தான் இடையே தற்போது சுமூக உறவு இல்லாத நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்கு வருகை தந்த சீனா அதிபர் ஜி ஜின்பிங்கை, பிரதமர் மோடி இன்று சந்தித்தார். ஷாங்காய் அமைப்பில் இந்தியாவை உறுப்பினராக சேர்த்துக்கொள்ள ஆதரவு தெரிவித்ததற்காக, சீன அதிபருக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.


.

மூலக்கதை