சாம்பியன்ஸ் ட்ராபி! அரையிறுதிக்கு முன்னேறப்போகும் அணிகள் யார்?

PARIS TAMIL  PARIS TAMIL
சாம்பியன்ஸ் ட்ராபி! அரையிறுதிக்கு முன்னேறப்போகும் அணிகள் யார்?

 சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட், பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. குரூப் - ஏ பிரிவில், இங்கிலாந்து அணி இரண்டு வெற்றியுடன் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஆனால், மீதமுள்ள மூன்று அணிகளில் யார் அரையிறுதிச் சுற்றுக்குள் செல்வார்கள் என்று கிரிக்கெட் விமர்சகர்களாலேயே யூகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

 
ஆஸ்திரேலிய அணி விளையாடிய இரண்டு போட்டிகளுமே மழையால் பாதித்ததால், மனதளவிலும்  பாதிக்கப்பட்டிருக்கக்கூடும். அந்த அணி இரண்டு புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதற்கிடையே, அடுத்த சுற்றுக்கு முன்னேற அது பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை வெல்ல வேண்டும். அதே நேரத்தில், பங்களாதேஷ், நியூஸிலாந்து அணிகள் தலா ஒரு புள்ளியுடன் உள்ளன. பங்களாதேஷ் - நியூஸிலாந்து போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு (ஆஸ்திரேலியா தோல்வியடைந்தால்) அரையிறுதிக்குச் செல்ல வாய்ப்புள்ளது.
 
ஆனால், ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால், இங்கிலாந்து அணியுடன் சேர்ந்து அந்த அணியும் அரையிறுதிக்குள் சென்று விடும். வருண பகவான் வழி விட்டால் மட்டுமே இது நடக்கும். போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டால் நிலைமை சிக்கல்தான். குரூப்-ஏ பிரிவில் இங்கிலாந்தைத் தவிர மற்ற அணிகளுக்கு சிறப்பான ரன் ரேட்டும் இல்லை.
 
குரூப் - ஏ-வை விட, குரூப்-பி பிரிவில்தான் பயங்கர சிக்கல் நிலவுகிறது. இந்தியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நான்கு அணிகளுமே தலா ஒரு வெற்றி பெற்று, இரண்டு புள்ளிகளுடன் உள்ளன. இலங்கையுடனான போட்டியில் எளிதாக வென்று, குரூப் - பி பிரிவில் முதல் அணியாக இந்தியா அரையிறுதிக்குள் செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதைத் தவிடுபொடியாக்கி அதிர்ச்சியளித்துள்ளது இலங்கை. பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்க அணியை பாகிஸ்தான் அசைத்துப் பார்த்துவிட்டது. இந்த இரண்டு ட்விஸ்ட்களாலும் குரூப் - பி பிரிவில் அடுத்தடுத்து நடக்க உள்ள போட்டிகள் அனல் பறக்கும்.
 
அடுத்ததாக இந்தியா - தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோத உள்ளன. இந்த இரண்டு போட்டிகளுமே, கிட்டத்தட்ட காலிறுதிச்சுற்று மாதிரிதான். இந்தப் போட்டியில் வெல்லும் அணிகள் மட்டுமே அரையிறுதிக்குச் செல்ல முடியும். இந்தப் போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டால், அரையிறுதிக்குச் செல்ல ரன் ரேட் முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படும். இந்தியாவைப் பொறுத்தவரை பாகிஸ்தான், இலங்கை இரண்டு அணிகளுக்கும் எதிரான போட்டியிலும் 300+ ரன்களைக் குவித்துள்ளது. இதனால், டீசன்டான ரன் ரேட்டை இந்திய அணி தக்கவைத்துள்ளது. குறிப்பாக, இலங்கை அணியுடன் தோல்வியடைந்த போதும் ரன் ரேட் சிறப்பாக உள்ளதால், இந்திய அணி குரூப்-பி பிரிவில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
 
ஆனால், அரையிறுதிக்கு முன்னேற பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்க அணியை வென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்தியா உள்ளது. இரண்டு பிரிவுகளிலுமே எஞ்சிய ஆட்டங்கள் அனைத்தும் லீக் சுற்றைப் போல இல்லாமல், காலிறுதிச்சுற்றுபோலத்தான் இருக்கும். ஒவ்வோர் அணியும் அரையிறுதிக்குள் செல்ல கடுமையாகப் போராடியாக வேண்டும்.
 
இதில், இங்கிலாந்து அணி மட்டும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சற்று ரிலாக்ஸாக ஆடலாம். இங்கிலாந்து அணிக்குதான் அது சம்பிரதாயப் போட்டியாக இருக்கும். ஆஸ்திரேலியாவுக்கு அது, வாழ்வா... சாவா போட்டிதான். இதனிடையே, ஆஸ்திரேலிய அணியை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, கெத்தாக அரையிறுதிக்குள் நுழைவோம் என்று இங்கிலாந்து அணி வீரர்கள் கூறிவருகின்றனர்.
 
இதில், எந்த அணிகள் சாம்பியன்ஸ் ட்ராபி அரையிறுதிக்கு முன்னேறும் என்று இன்னும் நான்கு நாள்களில் தெரிந்துவிடும். அதுவரை இன்னும் நிறைய ஆட்டம் இருக்கின்றன. பொறுத்திருந்து பார்ப்போம்.

மூலக்கதை