எதிர்ப்பின்றி வீழ்ந்தது நியூசிலாந்து அரையிறுதிக்கு முன்னேறியது மகிழ்ச்சி ஆனாலும் முழு திருப்தி ஏற்படவில்லை: இங்கிலாந்து கேப்டன் மோர்கன் கருத்து

தமிழ் முரசு  தமிழ் முரசு
எதிர்ப்பின்றி வீழ்ந்தது நியூசிலாந்து அரையிறுதிக்கு முன்னேறியது மகிழ்ச்சி ஆனாலும் முழு திருப்தி ஏற்படவில்லை: இங்கிலாந்து கேப்டன் மோர்கன் கருத்து

கார்டிப்: கார்டிப் சோபியா கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த, சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 6வது லீக் போட்டியில், இங்கிலாந்து-நியூசிலாந்து  அணிகள் (குரூப் ஏ) மோதின. முதலில் பேட் செய்த இங்கிலாந்து 49. 3 ஓவர்களில் 310 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

ஜோ ரூட் 64, ஜோஸ் பட்லர் 61  ரன்கள் எடுத்தனர். ஆடம் மிலன், கோரி ஆண்டர்சன் தலா 3, சவுத்தி 2, போல்ட், சான்ட்னர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் பேட் செய்த  நியூசிலாந்து 44. 3 ஓவர்களில் 223 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 87 ரன்கள் வித்தியாசத்தில் ேதால்வியடைந்தது. அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 87  ரன்கள் எடுத்தார்.

பிளங்கெட் 4, ஜேக் பால், அடில் ரஷீத் தலா 2, மார்க் வுட், பென் ஸ்டோக்ஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 8 ஓவர்களில் 31 ரன்கள்  மட்டும் கொடுத்து (2 மெய்டன்) 2 விக்கெட் வீழ்த்திய ஜேக் பால் ஆட்ட நாயகன் விருது வென்றார்.



 முதல் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்திய இங்கிலாந்து 2வது வெற்றியின் மூலம் முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது. அடுத்ததாக  வரும் 10ம் தேதி நடைபெறும் 3வது மற்றும் கடைசி போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் இங்கிலாந்து மோதுகிறது.

இந்த போட்டியில் வெற்றி பெற்றால்  2வது அணியாக ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு முன்னேறும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில்  நியூசிலாந்து நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது.

9ம் தேதி நடைபெறும் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றாலும், இங்கிலாந்திடம்  ஆஸ்திரேலியா தோல்வியடைந்தால் மட்டுமே நியூசிலாந்து அரையிறுதிக்கு முன்னேறும். வங்கதேசத்திற்கும் இன்னும் அரையிறுதி வாய்ப்பு உள்ளது.   நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் வெற்றி பெற்று, இங்கிலாந்திடம் ஆஸ்திரேலியா தோல்வியடைந்தால், வங்கதேசத்திற்கு அரையிறுதி  வாய்ப்பு கிடைக்கும்.



 நியூசிலாந்துக்கு எதிரான வெற்றி குறித்து இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் கூறுகையில், ‘அரையிறுதிக்கு முன்னேறியது மகிழ்ச்சியளிக்கிறது.   ஆனால் எனக்கு முழு திருப்தியில்லை. எங்களது முழுமையான ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும்.

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் எங்களின்  பேட்டிங் சிறப்பாக இருந்தது. எனினும் 30 ரன்கள் குறைவாக எடுத்ததாகவே கருதுகிறேன்.

ஒரு கட்டத்தில் நாங்கள் 340 ரன்களை கடப்பதற்கான  வாய்ப்பு இருந்தது. அரையிறுதிக்கு முன்னேறி விட்டதால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியை எளிதாக எடுத்து கொள்ள மாட்டோம்.

வலுவான  அணிகளை நாங்கள் வீழ்த்த வேண்டியுள்ளது. ஆஸ்திரேலியா வலுவான அணி.

எதற்காகவும், எந்த அணிக்கும் வெற்றியை விட்டு கொடுக்க  மாட்டோம்’ என்றார். நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் கூறுகையில், ‘அனைத்து துறைகளிலும் எங்களை விட இங்கிலாந்து சிறப்பாக  செயல்பட்டது.

வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது’ என்றார்.



.

மூலக்கதை