யுவராஜ் சிங்கின் இன்னிங்ஸ்தான் ஆட்டத்தின் போக்கை மாற்றியது : கேப்டன் கோஹ்லி பாராட்டு

தமிழ் முரசு  தமிழ் முரசு
யுவராஜ் சிங்கின் இன்னிங்ஸ்தான் ஆட்டத்தின் போக்கை மாற்றியது : கேப்டன் கோஹ்லி பாராட்டு

பர்மிங்ஹாம்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில், பர்மிங்ஹாமில் நேற்று நடந்த 4வது லீக் போட்டியில், பரம எதிரியான பாகிஸ்தானை, டக்வொர்த் லீவிஸ் விதிப்படி, 124 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது. முதலில் பேட் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 48 ஓவர்கள் முடிவில் (2 முறை மழை பெய்ததால் 2 ஓவர்கள் குறைக்கப்பட்டது) 3 விக்கெட் இழப்பிற்கு 319 ரன்கள் குவித்தது.

ரோகித் சர்மா 91, கேப்டன் கோஹ்லி 81 (68 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்), ஷிகார் தவான் 68, யுவராஜ் சிங் 53 (32 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்), ஹர்திக் பாண்டியா 20 ரன்கள் (6 பந்து, 3 சிக்சர்) எடுத்தனர். பின்னர் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 48 ஓவர்களில் 324 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட் செய்த பாகிஸ்தான் 4. 5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 22 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது.



இதனால் 41 ஓவர்களில் 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என இலக்கு மீண்டும் மாற்றியமைக்கப்பட்டது. ஆனால் 33. 4 ஓவர்களில் 164 ரன்களுக்கு பாகிஸ்தான் ஆல் அவுட்டானது.

அசார் அலி 50 ரன்கள் எடுத்தார். உமேஷ் யாதவ் 3, ஹர்திக் பாண்டியா, ஜடேஜா தலா 2, புவனேஸ்வர் குமார் 1 விக்கெட் வீழ்த்தினர்.

வெற்றி குறித்து இந்திய கேப்டன் கோஹ்லி கூறுகையில், ‘2013 சாம்பியன்ஸ் டிராபியை வென்றதில், ரோகித் சர்மா-ஷிகார் தவானின் முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்புக்கு முக்கிய பங்குள்ளது. அதேபோன்றதொரு சிறப்பான ஆட்டத்தை அவர்கள் வெளிப்படுத்தினர் (முதல் விக்கெட்டிற்கு 136 ரன்கள் சேர்த்தனர்).

யுவராஜ் சிங்கின் இன்னிங்ஸ்தான் ஆட்டத்தின் போக்கை மாற்றியது.

யுவராஜ் சிங் அதிரடியாக விளையாடினார்.

‘லோ புல் டாஸ்’, ‘யார்க்கர்’ பந்துகளை கூட அவர் பவுண்டரிக்கும், சிக்சருக்கும் விளாசினார். இதன் மூலம்தான் நாங்களும் பந்தை அடித்து விளையாட தொடங்குவதற்கான நம்பிக்கையை பெற்றோம்.

யுவராஜ் சிங்குடன் இணைந்து பேட்டிங் செய்தபோது, நான் ஒரு கிளப் பேட்ஸ்மேன் போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. ஹர்திக் பாண்டியாவின் ஆட்டமும் சிறப்பாக இருந்தது.

பாகிஸ்தான் வீரர்கள் சுழற்பந்து வீச்சை எளிதாக எதிர்கொள்வார்கள் என்பதால், 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கினோம். மற்ற அணிகளுக்கு எதிராக, அவர்களின் பலம், பலவீனங்களை பொறுத்து, 2 சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்குவோம்’ என்றார்.


.

மூலக்கதை