நியூஸி. – ஆஸி. போட்டி மழையினால் கைவிடப்பட்டது!

PARIS TAMIL  PARIS TAMIL
நியூஸி. – ஆஸி. போட்டி மழையினால் கைவிடப்பட்டது!

 நியூஸிலாந்து அணிக்கு அதிர்ஷ்டம் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். காரணம் மழை குறுக்கிட்டதால் வெற்றிபெற வேண்டிய போட்டியை பறிகொடுத்த சோகத்தில் ஆழ்ந்துள்ளது நியூஸிலாந்து. ஆனால் மறுமுனையில் ஆட்டம் கைவிடப்பட்டதால் அவுஸ்திரேலிய வீரர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 
இங்கிலாந்தில் எட்டாவது ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று பர்மிங்ஹோமில் நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் நியூஸிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதின.
 
இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணித் தலைவர் வில்லியம்சன் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.
 
நியூஸிலாந்து அணிக்கு குப்தில் மற்றும் ரான்கி ஜோடி சுமாரான ஆரம்பத்தை கொடுத்தது. ஹசில்வுட் வேகத்தில் குப்தில் 26 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். 
 
நியூஸிலாந்து அணி 9.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 67 ஓட்டங்களை எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. ஒன்றரை மணி நேரத்திற்குப் பின் மீண்டும் ஆரம்பமான போட்டி தலா 46 ஓவர்கள் என குறைக்கப்பட்டு ஆடப்பட்டது. 
 
அதைத் தொடர்ந்து இணைந்த ரோஸ்டெய்லர் மற்றும் வில்லியம்சன் ஜோடி எதிரணி பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டது. 3 விக்கெட்டுக்கு 99 ஓட்டங்களை சேர்த்தபோது, ரோஸ் டெய்லர் 46 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அபார ஆட்டத்தை தொடர்ந்த வில்லியம்சன் ஒருநாள் அரங்களில் தனது ஒன்பதாவது சதத்தை விளாசினார்.
 
இதன் பின் ஹசில்வுட் வேகத்தில் மிரட்ட, நியூஸிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ஹசில்வுட் வீசிய 45ஆவது ஓவரின் மூன்றாவது மற்றும் நான்காவது பந்துகளில் மில்னே (11), சான்ட்னர் (8) ஆட்டமிழந்தனர். அடுத்த பந்தை பெளல்ட் தடுத்தாட 'ஹெட்ரிக்' விக்கெட் பெறும் வாய்ப்பு நழுவியது. கடைசி பந்தில் இவரும் ஓட்டமேதும் பெறாத நிலையில் ஆட்டமிழக்க நியூஸிலாந்து அணி 45 ஓவர்களில் 291 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. அவுஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஹசில்வுட் 6 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
 
அவுஸ்திரேலியா துடுப்பெடுத்தாட வரும்போது மீண்டும் மழை குறுக்கிட்டது. இதனால் அவுஸ்திரேலிய அணிக்கு 'டக்வோர்த் லூயிஸ்' முறைப்படி 33 ஓவர்களில் 235 ஓட்டங்கள் என வெற்றி இலக்கு மாற்றப்பட்டது. 
 
இந்நிலையில் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியினரை நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்திவிட்டனர். பௌல்டின் பந்தில் டேவிட் வோர்னர் 18 ஓட்டங்களுடன் வெளியேறினார். மின்னேவின் பந்துவீச்சில் பின்ச் 8 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். ஹென்ரிக்ஸும் 18 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். 
 
இதனால் அவுஸ்திரேலிய அணி 9 ஓவர்களில் 53 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை எடுத்து திணறிக்கொண்டிருந்த வேளையில் மீண்டும் மழை பெய்தது. இதனால் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வீதம் பகிர்ந்தளிக்கப்பட்டது. ஆரம்பத்திலேயே மூன்று விக்கெட்டுக்களை பறிகொடுத்த அவுஸ்திரேலிய அணி நிம்மதி பெருமூச்சுவிட்டது.
 
நேற்றைய போட்டியில் அவுஸ்திரேலியாவின் ஹசில்வுட் 9 ஓவர்கள் பந்துவீசி 52 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். இதன் மூலம் சம்பியன்ஸ் கிண்ண வரலாற்றில் சிறந்த பந்துவீச்சை பதிவுசெய்த இரண்டாவது பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றார். முதலிடத்தில் இலங்கை அணியின் பர்வேஸ் மஹ்ருப் உள்ளார். இவர் 14 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். 
 
அத்தோடு அவுஸ்திரேலி யாவுக்கு எதிராக தனது முதல் ஒருநாள் சதத்தை விளாசினார் வில்லியம்சன். அதேபோல் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் அரங்கில் தனது அதி பட்ச ஓட்ட எண்ணிக்கையை யும் (291) பதிவுசெய்தது நியூஸிலாந்து. இதற்குமுன் 186 ஓட்டங்கள் எடுத்ததே அதிகமான ஓட்ட எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது. 

மூலக்கதை