பிசிசிஐ சமாதானம் செய்ததால்தான் கும்ப்ளேவை கோஹ்லி ஏற்று கொண்டார் : முன்னாள் செயலாளர் பரபரப்பு தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பிசிசிஐ சமாதானம் செய்ததால்தான் கும்ப்ளேவை கோஹ்லி ஏற்று கொண்டார் : முன்னாள் செயலாளர் பரபரப்பு தகவல்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த ஆண்டு ஜுன் மாதம் கும்ப்ளே நியமிக்கப்பட்டார். அவரது ஓராண்டு பதவிக்காலம் சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் முடிவுக்கு வருகிறது.

கும்ப்ளேவுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பயிற்சியாளர் பதவிக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) திடீரென விண்ணப்பங்களை வரவேற்றது. இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி-கும்ப்ளே இடையே ஏற்பட்ட மோதலே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

கும்ப்ளேவை பயிற்சியாளராக தேர்வு செய்த பணிகளில் ஈடுபட்டவர்களில் ஒருவர் பிசிசிஐ முன்னாள் செயலாளர் அஜய் ஷிர்கே. கோஹ்லி-கும்ப்ளே மோதல் விவகாரம் தொடர்பாக புதிய பரபரப்பு தகவல் ஒன்றை அஜய் ஷிர்கே தற்போது வெளியிட்டுள்ளார்.



இது குறித்து அவர் கூறுகையில், ‘கும்ப்ளேவை பயிற்சியாளராக நியமித்ததற்கு ஆரம்பம் முதலே கோஹ்லி எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இந்திய அணியின் முன்னாள் வீரர்களான சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, விவிஎஸ் லட்சுமணன் ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனை குழு கும்ப்ளேவை ஒருமனதாக பயிற்சியாளராக தேர்வு செய்து விட்டதால், அந்த முடிவை ஏற்றுக்கொள்ளும்படி பிசிசிஐ கோஹ்லியை சமாதானம் செய்தது.

அப்போதைய பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர்தான் இது தொடர்பாக கோஹ்லியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். கிரிக்கெட் ஆலோசனை குழுவின் பரிந்துரையை புறக்கணிக்க முடியாது என அவர் கூறியதின் பேரில்தான் கும்ப்ளேவை பயிற்சியாளராக கோஹ்லி ஏற்று கொண்டார்.

பயிற்சியாளர் பதவிக்கு பிசிசிஐ விண்ணப்பங்களை வரவேற்றது நல்ல முடிவுதான்.

பயிற்சியாளரை நியமிப்பது என்பது பிசிசிஐயின் தனிப்படை உரிமை சார்ந்தது’ என்றார்.

.

மூலக்கதை