மணிலா நட்சத்திர விடுதியில் தீவிரவாதி சரமாரி துப்பாக்கி சூடு : 36 சுற்றுலா பயணிகள் பரிதாப பலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
மணிலா நட்சத்திர விடுதியில் தீவிரவாதி சரமாரி துப்பாக்கி சூடு : 36 சுற்றுலா பயணிகள் பரிதாப பலி

மணிலா: பிலின்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நட்சத்திர விடுதியில் தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 36 பேர் பலியாயினர். பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள தலைநகர் மணிலாவில் ரெசார்ட்ஸ் வேர்ல்ட் என்ற நட்சத்திர விடுதி உள்ளது.

இங்கு ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து தங்கி செல்வது வழக்கம். இங்கு உள்ள சூதாட்ட கூடத்தில் மர்ம ஆசாமி ஒருவன் இன்று அதிகாலை கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினான்.

உடனடியாக தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஆனால் அங்கு ஆசாமி நடத்திய கோர தாக்குதலில் 36 பேர் துப்பாக்கி குண்டுக்கு இரையாகி பலியானதாக தகவல் தெரியவந்துள்ளது.

இதையடுத்து அப்பகுதி முழுவதையும் போலீசார் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.

அப்பகுதியில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

இதையடுத்து விடுதி தற்காலிகமாக மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. போலீசார் சுற்றி வளைத்ததையடுத்து ஆசாமி தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


சம்பவ இடத்தில் இருந்து 36 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் காயமடைந்த 50க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

துப்பாக்கி சூடு காரணமாக தீ பிடித்து எரிந்ததால் அச்சம் காரணமாக மக்கள் அவசரமாக கூட்டம் கூட்டமாக வெளியேற முயன்றதால் நெரிசலில் சிக்கியதால்தான் அதிகமானோர் பலியாக நேர்ந்ததாக மணிலா போலீசார் தெரிவித்துள்ளனர்.

சூதாட்ட விடுதியை கொள்ளையடிக்கும் நோக்கில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு உள்ளது. ஐஎஸ் தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என அந்நாட்டு புலனாய்வு துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் சர்வதேச நாடுகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

.

மூலக்கதை