ரஷ்யா சென்றடைந்தார் பிரதமர் மோடி: கூடங்குளத்தில் புதிய அணுஉலைகள் குறித்து ஆலோசனை

தமிழ் முரசு  தமிழ் முரசு
ரஷ்யா சென்றடைந்தார் பிரதமர் மோடி: கூடங்குளத்தில் புதிய அணுஉலைகள் குறித்து ஆலோசனை

செயின்ட் பீட்டர்ஸ்பெர்க்: பிரதமர் நரேந்திர மோடி, அரசுமுறை பயணமாக ரஷ்யா சென்றடைந்தார். கூடங்குளத்தில் அமையவுள்ள 5, 6வது அணு உலைகள் குறித்து அந்நாட்டு அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக ஜெர்மனி, ஸ்பெயின், ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதல்கட்டமாக, ஜெர்மனி சென்ற பிரதமர், அங்கிருந்து ஸ்பெயின் சென்றார்.

அந்நாட்டு அதிபர் மேரியானா ரஜோயை நேற்று சந்தித்து பேசினார். இருநாடுகள் இடையே இணையதள பாதுகாப்பு, விமான போக்குவரத்து உள்ளிட்ட 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

தீவிரவாதத்தை தடுப்பதில் பரஸ்பரம் ஒத்துழைப்பு வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது.

ஸ்பெயின் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்ட மோடி, நேற்று இரவு ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ் பெர்க் நகரை சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

‘வரலாற்று சிறப்புமிக்க செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரை சென்றடைந்துள்ளேன். இந்தியா-ரஷ்யா இடையேயான உறவை வலுப்படுத்துவதே இப்பயணத்தின் முக்கிய நோக்கம்’ என பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
ரஷ்ய சுற்றுப்பயணத்தில் அந்நாட்டு அதிபர் புதினை, மோடி சந்தித்து பேசுகிறார்.

வர்த்தகம், முதலீடு, தீவிரவாத தடுப்பு உள்ளிட்டவை குறித்து இருவரும் விவாதிக்கின்றனர். அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், ரயில்வே கலாச்சார பரிமாற்றம் உள்ளிட்ட துறைகளில் 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.

முக்கியமாக, தமிழகத்தில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தில் புதிதாக 5, 6வது அணு உலைகள் அமைப்பது குறித்து இருதரப்பு இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

ரஷ்யா ஒத்துழைப்புடன் கூடங்குளத்தில் அமைக்கப்பட்ட 1, 2வது அணு உலைகள் தற்போது இயங்கி வரும் நிலையில், 3 4வது உலைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் 5, 6வது அணு உலைகள் அமைப்பது தொடர்பாக கடந்தாண்டு கோவாவில் நடந்த அணுசக்தி மாநாட்டில்  விவாதிக்கப்பட்டது.

எனினும், அணு உலைகள் அமைப்பதில் காலதாமதம்  ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், கூடங்குளத்தில் புதிய அணு உலைகள் அமைக்கும் பணியை விரைவில் தொடங்குவது குறித்து புதினுடன், மோடி ஆலோசனை நடத்துகிறார்.

இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது.
 
இந்தியா, ரஷ்யாவை சேர்ந்த பிரபல நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் பங்கேற்கும் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

அப்போது, இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு ரஷ்ய தொழில் நிறுவனங்களுக்கு மோடி அழைப்பு விடுக்கிறார்.

.

மூலக்கதை