சாம்பியன்ஸ் டிராபியை அச்சுறுத்தும் மழை: பாடம் கற்றுக்கொள்ளாத ஐசிசி

தமிழ் முரசு  தமிழ் முரசு
சாம்பியன்ஸ் டிராபியை அச்சுறுத்தும் மழை: பாடம் கற்றுக்கொள்ளாத ஐசிசி

லண்டன்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் 1ம் தேதி தொடங்குகிறது. முன்னதாக பயிற்சி போட்டிகள் நடந்து வருகின்றன.

ஆனால்  இந்தியா-நியூசிலாந்து, ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான பயிற்சி போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டன. லண்டனில் நேற்று  முன் தினம் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ‘டக்வொர்த் லீவிஸ்’ விதிப்படி இந்தியா வென்றதாக அறிவிக்கப்பட்டது.

பாகிஸ்தானுக்கு  எதிராக பர்மிங்ஹாமில் நேற்று நடைபெற்ற பயிற்சி போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 10. 2 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 57  ரன்கள் எடுத்திருந்தபோது மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது. அதுதவிர இங்கிலாந்து-தென் ஆப்ரிக்கா இடையேயான ஒரு நாள் தொடரின்போதும் கூட  அவ்வப்போது மழை குறுக்கிட்டது.



 ஒரு பெரிய புயலுக்கான முன்னெச்சரிக்கை அறிவிப்பு இங்கிலாந்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் சாம்பியன்ஸ் டிராபி போன்ற முக்கியமான ஒரு  தொடரை நடத்த இந்த தருணத்தை ஐசிசி தேர்வு செய்தது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

முந்தைய சாம்பியன்ஸ் டிராபி தொடர்களும் கூட  மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. 2002ம் ஆண்டு கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடந்த இறுதி போட்டி மழையால் பாதிக்கப்பட, இந்தியா-இலங்கை  அணிகள் இணை சாம்பியன்களாக அறிவிக்கப்பட்டன.

ஆனால் இதில் இருந்து ஐசிசி பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்றே கிரிக்கெட் விமர்சகர்கள்  கூறுகின்றனர்.

 நடப்பு தொடரில் போட்டிகள் நடைபெறும் லண்டன், பர்மிங்ஹாம், கார்டிப் ஆகிய 3 நகரங்களும் புயல்படர் வானிலை கொண்டவை என்பது  அனைவரும் அறிந்ததே.

இதில், பர்மிங்ஹாம் நேற்று முழுவதும் மழையை கண்டது. உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில்  உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான ‘ஹை-வோல்டேஜ்’ போட்டி வரும் ஜூன் 4ம் தேதி  பர்மிங்ஹாமில்தான் நடைபெறுவதாக உள்ளது.

அடுத்த 2 வார காலத்தில், லண்டன் நகரம் 4 நாட்கள் 5-10 மில்லி மீட்டர் மழையை பெறும் வாய்ப்பு  இருப்பதாக கூறப்படுகிறது. இது 15-20 மில்லி மீட்டர் என உயரலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர இங்கிலாந்து-நியூசிலாந்து லீக் (ஜுன் 6),  முதல் அரையிறுதி (ஜுன் 14) என முக்கியமான போட்டிகள் நடைபெறும் கார்டிப் நகரிலும் மழைக்கான வானிலை நிலவுகிறது. டிக்கெட்டுகள் விற்று  தீர்ந்து விட்ட நிலையில், போட்டிகளில் மழை விளையாடி விடக்கூடாது என்பதே ரசிகர்களின் எண்ணமாக உள்ளது.




.

மூலக்கதை