விவசாயத்துக்கு மின் வினியோகம்... ஷாக் அடிக்குது... ஷாக் அடிக்குது! 14 மணியிலிருந்து 8 மணி நேரமாக சரிவு

தினமலர்  தினமலர்
விவசாயத்துக்கு மின் வினியோகம்... ஷாக் அடிக்குது... ஷாக் அடிக்குது! 14 மணியிலிருந்து 8 மணி நேரமாக சரிவு

கோவை : கோவையில் விவசாய மின் இணைப்புகளுக்கான, மும்முனை மின் வினியோக நேரத்தை, மின்வாரியம் குறைத்துள்ளது. கோவை புறநகர் பகுதியில் பகலில் 6, இரவில் 8 என, 14 மணி நேரம் வினியோகம் செய்யப்பட்ட மும்முனை மின்சாரம், தற்போது மொத்தமாக, 8 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தமிழகத்தில், வேளாண்துறை புள்ளியியல் துறை புள்ளி விபரங்களின்படி, 35 லட்சம் ஹெக்டேர் பரப்பில், தென்னை, கரும்பு, வாழை, காய்கறி, தானியம், உள்ளிட்ட பயிர் விளைவிக்கப்படுகின்றன.இதில், 20 சதவீத நிலம், மானாவாரி நிலப்பரப்பாகும். மீதமுள்ள, 80 சதவீதத்தில், ஆழ்துளை கிணறு மற்றும் நீர்ப்பாசன திட்டங்கள் மூலம் பாசனம் செய்யப்படுகிறது. நீர்ப்பாசனத்துக்காக தமிழகத்தில், சுமார், 35 லட்சம் மின் இணைப்புகள் உள்ளன.விவசாய மின் இணைப்புக்கு, இலவசமாக மும்முனை மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. 2011ம் ஆண்டு, அ.தி.மு.க., அரசு பொறுப்புக்கு வந்த போது, மின்தட்டுப்பாடு ஏற்பட்டது. அப்போது, பகலில், 3 மணி நேரமும், இரவில், 3 மணி நேரமும் மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டது.பருவமழையால் நிலைமை சீரானதும், நீர்மின் உற்பத்தி, காற்றாலை மின் உற்பத்தி துவங்கியது. இதனால் மின்வெட்டு நேரம் குறைந்து, விவசாய மின் வினியோகம் பகலில், 6 மணி நேரமும் இரவில், 8 மணி நேரமும் வழங்கப்பட்டது.ஆனால் கோவையில், கடந்த மாதம் முதல் மீண்டும் மின் வெட்டு ஏற்பட்டதால், மின் வினியோக நேரம் படிப்படியாக குறைந்து, பகலில், 6 மணி நேரத்துக்கு பதிலாக, 4 மணி நேரமும், இரவில், 8 மணி நேரத்துக்கு பதிலாக, 4 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது. பகல், இரவு என்று மொத்தம், 14 மணி நேரத்துக்கு பதிலாக, 8 மணி நேரம் மட்டுமே மின்வினியோகம் செய்யப்படுகிறது. இதனால், சொட்டுநீர், நுண்நீர் பாசனத்துக்கு, மின்சார பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இக்குறையை நீக்கி, மின் வினியோகத்தை சீராக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.கோவை மாவட்ட உழவர் நல சங்க தலைவர் துரைசாமி கூறுகையில், ''விவசாயத்துக்கான மும்முனை மின்சாரம், பகல், இரவு நேரங்களில் தலா, 4 மணி நேரம் மட்டுமே கிடைக்கிறது. மொத்தம் கிடைக்க வேண்டிய, 14 மணி நேர மின்சாரத்துக்கு, 8 மணி நேரத்துக்கு மட்டுமே மின்சாரம் கிடைக்கிறது; 6 மணி நேரம் மின் வெட்டு ஏற்படுகிறது.விவசாயத்துக்கு சப்ளை செய்யப்படும் மின்சாரம், குறைந்த மின் அழுத்தத்தில் சப்ளை செய்யப்படுகிறது. இதனால் மோட்டார் அடிக்கடி பழுதாவதோடு, குறைந்த அளவு தண்ணீரே விளை நிலங்களுக்கு பாய்ச்ச முடிகிறது. இதனால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படுகிறது,'' என்றார்.கட்சி, ஜாதி, மதம் சார்பற்ற விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் கந்தசாமி கூறியதாவது:இரவில் ஆழ்துளை கிணற்று தண்ணீரை 'பம்ப்' செய்து, புழக்கத்திலுள்ள கிணற்றில் சேமிக்க வேண்டும். பகலில் அந்த தண்ணீரை பாசனத்துக்கு வினியோகிக்க வேண்டும்.மின் வெட்டு காரணமாக ஆழ்துளை கிணற்று நீரை 'பம்ப்' செய்யமுடிவதில்லை. கிடைக்கும் மின்சாரத்தில் 'பம்ப்' செய்தாலும், புழக்கத்திலுள்ள கிணற்றில் தண்ணீர் மட்டம் உயருவதில்லை. வறட்சியால் விவசாய நிலங்களில் உள்ள கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் வறண்டு போயுள்ளன.தற்போது விவசாயத்துக்கு தேவையான, 14 மணி நேர மின்சாரம் வினியோகிக்கப்படுவதில்லை. ஒரு பக்கம், காட்டு விலங்குகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகிறது. மறுபக்கம், போதுமான மின்சாரம் கிடைக்காமல் விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.மின்வாரிய அதிகாரிகள் தலையிட்டு, விவசாயிகளுக்கான, மின் சப்ளை நேரத்தை அதிகரிக்க வேண்டும். இலவச மின்சாரம் என்பதால், மோட்டார் பழுதுபட்டாலும், மின் கம்பி அறுந்து விழுந்தாலும், மின் இணைப்பில் பழுது ஏற்பட்டாலும், மின்வாரிய அதிகாரிகள் அக்கறை செலுத்துவதில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.

'அப்படிங்களா... யார் சொன்னது?'தமிழ்நாடு மின் பகிர்மானக்கழக, கோவை மண்டல தலைமை பொறியாளர் ஆல்துரை கூறியதாவது:கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளடக்கிய, கோவை மண்டலத்தில், விவசாயம், வர்த்தகம் மற்றும் வீட்டு மின் இணைப்பு என்று எந்த மின் இணைப்புக்கும், மின்வினியோகத்தில் பாகுபாடு இல்லை. தொடர்ந்து, 24 மணி நேரமும் மின்வினியோகம் செய்யப்படுகிறது.ஏனென்றால், காற்றாலை வாயிலாக, நாளொன்றுக்கு, 3,800 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்துக்கு வழங்கப்படுகிறது. கோவையை பொறுத்தவரை, தொழில்துறையினர், விவசாய பயன்பாடு, வர்த்தக பயன்பாடு, வீட்டு இணைப்பு ஆகியவற்றிற்கு தேவையான மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. அதில் எந்த பிரச்னையும் இல்லை,'' என்றார்.

மூலக்கதை