ஜெர்மனி, ஸ்பெயின், ரஷ்யா, உள்ளிட்ட 4 நாடுகளுக்கு 6 நாள் பயணம்.. இன்று புறப்படுகிறார் பிரதமர் மோடி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஜெர்மனி, ஸ்பெயின், ரஷ்யா, உள்ளிட்ட 4 நாடுகளுக்கு 6 நாள் பயணம்.. இன்று புறப்படுகிறார் பிரதமர் மோடி!

டெல்லி: பிரதமர் மோடி ஜெர்மனி, ஸ்பெயின், ரஷியா, பிரான்ஸ் ஆகிய 4 நாடுகளுக்கு இன்று சுற்றுப்பயணம் செல்கிறார். இதற்காக அவர் டெல்லியில் இருந்து இன்று புறப்படுகிறார்.

வணிகம் மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் வகையில் பிரதமர் மோடி, ரஷியா, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய 4 நாடுகளுக்கு 6 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இன்று தொடங்கும் இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக அவர் ஜெர்மனிக்கு செல்கிறார்.

அங்கு இந்தியா-ஜெர்மனி நாடுகளுக்கு இடையேயான ஆலோசனை கட்டமைப்பின்படி அந்நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார். பின்னர் ஜெர்மன் அதிபர் பிராங்க்-வால்டர் ஸ்டைன்மரையும் மோடி சந்திக்கவுள்ளார்.

பிரதமரின் இந்த சுற்றுப்பயணத்தின் போது இந்தியா-ஜெர்மனி இடையே வணிகம் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு, திறன் மேம்பாடு, நகர்ப்புற கட்டமைப்பு, ரெயில்வே மற்றும் சிவில் விமான போக்குவரத்து உள்ளிட்ட துறைகளுக்கான எதிர்கால திட்டங்கள் வரையறுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனி பயணத்தை முடித்து விட்டு பிரதமர் நரேந்திர மோடி நாளை ஸ்பெயின் நாட்டுக்கு செல்கிறார். ராஜீவ் காந்திக்கு பிறகு கடந்த 30 ஆண்டுகளில் ஸ்பெயினுக்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி ஆவார்.

அங்கு அவர் ஸ்பெயின் மன்னர் 6ஆம் பிலிப் மற்றும் அதிபர் மரியானோ ரஜோய் ஆகியோருடன் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார். இதில் இந்தியாவின் கட்டமைப்பு, ஸ்மார்ட் நகரங்கள், டிஜிட்டல் பொருளாதாரம், புதுப்பிக்கவல்ல எரிசக்தி போன்ற துறைகளில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களில் ஸ்பெயின் நிறுவனங்களின் பங்களிப்பு போன்றவை இந்த பேச்சுவார்த்தையில் முக்கிய இடம் வகிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி 31ஆம் தேதி தேதி ரஷியாவுக்கு செல்கிறார். ஜூன் 2ஆம் தேதி தேதி வரை அங்கு தங்கியிருக்கும் மோடி, இந்தியா-ரஷியா 18வது உச்சிமாநாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கிறார்.

குறிப்பாக அதிபர் புதினுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை, இருநாட்டு அதிகாரிகளுடன் மோடி-புதினின் கலந்துரையாடல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.மேலும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் 2ஆம் தேதி நடைபெறும் சர்வதேச பொருளாதார மன்றத்திலும் பிரதமர் மோடியும், அதிபர் புதினும் உரையாற்றுகிறார்கள்.

இந்த மன்றத்தில் சிறப்பு விருந்தினர் நாடாக இந்தியா பங்கேற்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக லெனின்கிராடு நகர முற்றுகையின் போது உயிர்நீத்தவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்துகிறார்.

ரஷிய பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி 2ஆம் தேதி பிரான்ஸ் செல்கிறார்.3 ஆம் தேதி வரை அங்கு தங்கியிருக்கும் மோடி, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரானை சந்தித்து பேசுகிறார்.

இதில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துதல் மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருதலைவர்களும் விவாதிக்கின்றனர். அத்துடன் 4 நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு பிரதமர் மோடி இந்தியா திரும்புகிறார்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மூலக்கதை