மினி உலககோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம் நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா

தினகரன்  தினகரன்

லண்டன்: ஐசிசி சாம்பியன் டிராபி பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்தை 45 ரன் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது. ஷமி, குமார், ஜடேஜா அபாரமாக பந்துவீசினர். மினி உலகக்கோப்பை என்று அழைக்கப்படும் ஐசிசி சாம்பியன் டிராபி போட்டிகள் இங்கிலாந்தில் ஜூன் 1ல் தொடங்குகின்றன. இதில் பங்கேற்கும் 8 அணிகள் தற்போது பயிற்சி ஆட்டங்களில் பங்குபெற்று விளையாடி வருகின்றன. நேற்று நடந்த பயிற்சி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், நியூசிலாந்தும் மோதின. இந்திய தரப்பில் ரோகித்சர்மா, யுவராஜ்சிங் களம் இறங்கவில்லை. டாசில் வென்ற நியூசிலாந்து முதலில் பேட் செய்ய தீர்மானித்தது.ஆனால் முகமது ஷமியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. கப்தில் 9, வில்லியம்சன் 8, புரூம் 0 ரன்னில் அவுட் ஆனார்கள். இதனால் 9 ஓவரில் 63 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து தடுமாறியது. தொடக்க வீரர் ரோஞ்சி மட்டும் நிலைத்து நின்று ரன்குவித்தார். அவர் 63 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 66 ரன் எடுத்தார். மற்ற வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். ஆண்டர்சன் 13, சான்ட்னர் 12, கிராண்ட் ஹோமி 4 ரன் எடுத்தனர். ஷமி, புவனேஸ்வர் குமார், ஜடேஜா, அஸ்வின் உள்பட இந்திய பந்து வீச்சாளர்களை எதிர்ெகாள்ள முடியாமல் நியூசிலாந்து வீரர்கள் திணறினார்கள்.நிசாம் மட்டும் தாக்குப்பிடித்து விளையாடினார். அவர் 47 பந்தில் 6 பவுண்டரியுடன் 46 ரன் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். மற்ற வீரர்களான மிலினி 9, சவுத்தி 4, பவுல்ட் 9 ரன்னில் அவுட் ஆனதால் நியூசிலாந்து 38.4 ஓவர்களில் 189 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் ஷமி, புவனேஸ்வர்குமார் தலா 3, ஜடேஜா 2, அஸ்வின், உமேஷ்யாதவ் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதன்பின் 190 ரன் எடுத்தால் வெற்றி இலக்குடன் இந்தியா ஆடத்தொடங்கியது. தொடக்கவீரர் ரகானே 7 ரன்னில் சவுத்தி பந்தில் பவுல்டிடம் பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார். அதன்பின் மற்றொரு தொடக்க வீரர் தவானுடன், கேப்டன் விராட் கோஹ்லி ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். ஸ்கோர் 98ஆக இருந்த போது தவான் ஆட்டம் இழந்தார். அவர் 59 பந்தில் 5 பவுண்டரியுடன் 40 ரன் எடுத்தார். அதன்பின் வந்த தினேஷ் கார்த்திக் டக்-அவுட் ஆனார். இதனை தொடர்ந்து கோஹ்லியுடன், டோனி ஜோடி சேர்ந்தார். கோலி 52 பந்தில் 6 பவுண்டரியுடன் அரைசதம் கடந்தார். ஸ்கோர் 3 விக்கெட் இழப்புக்கு 129 ஆக இருந்த போது கனமழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டது. அப்போது கோஹ்லி 52, டோனி 17 ரன்னுடன் களத்தில் இருந்தனர். மழை நிற்காததால் டி/எல் விதிப்படி 45 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றதாக அறிவிக் கப்பட்டது.

மூலக்கதை