பேரூராட்சி குப்பை கழிவுகளால் ஆரணி ஆறு... பாழாகுது! விவசாயம், குடிநீர் கிணறுகளுக்கும் பாதிப்பு

தினமலர்  தினமலர்

திருவள்ளூர்;பட்டரைபெரும்புதுார் தடுப்பணையில் இருந்து, வீரராகவர் கோவிலுக்கு நீர் கொண்டு வரும் திட்டத்தின் படி, மூடப்பட்ட குழாய் பதிக்க, நெடுஞ்சாலை துறையின் தடையில்லா சான்று கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டு உள்ளது. இதனால், கட்டுமான பணி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.திருவள்ளூர் வீரராகவர் கோவில், 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஒவ்வொரு அமாவாசை நாளிலும் தமிழகம், ஆந்திர மாநிலத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, கோவில் குளமான, 'ஹிருத்தாபநாசினி' குளத்தில் குளித்து, தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி செல்கின்றனர்.ஏழரை ஏக்கர் பரப்புஅளவு கொண்ட இக்குளம், 60 ஆண்டுகளுக்கு முன், நீர் நிரம்பி கடல் போல் காணப்படும். கால்வாய் ஆக்கிரமிப்பு காரணத்தால், குளத்திற்கு தண்ணீர் வருவதில் சிக்கல் உள்ளது. இதனால், கோவில் நிர்வாகம், ஆழ்துளை குழாய் மூலம் தண்ணீர் எடுத்து, குளத்தில் நீரை தேக்கி உள்ளது.இந்த நிலையில், பூண்டி ஏரியின் உபரி நீர் தேங்கும் இடமான பட்டரைபெரும்புதுாரில் சிறு தடுப்பணை கட்டி, கோவில் குளத்திற்கு தண்ணீர் கொண்டு வர வேண்டும் என, பக்தர்களும், கோவில் நிர்வாகமும் அரசுக்கு கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கையை ஏற்ற அரசு, 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து, தடுப்பணை கட்டும் பணி, 2015ம் ஆண்டு துவங்கி, ஓராண்டிற்குள் பணி நிறைவடைந்தது.தற்போது, 100 மீட்டர் நீளத்தில் ஆற்றின் நடுவில் தடுப்பணை கட்டப்பட்டு உள்ளது. கரையின் இருபுறமும் அதிகப்படியான தண்ணீரை வெளியேற்ற தலா இரண்டு மடை வீதம், நான்கு மடைகள் கட்டப்பட்டு உள்ளன. தற்போது நீர்த்தேக்கத்தின் உட்பகுதியில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி, ஒரு மாதமாக கிடப்பில் போடப்பட்டு உள்ளது. பணி துவங்குவதற்கான அறிகுறியே இல்லை. ஆற்றின் இரு பகுதிகளிலும் மண் குவித்து கரை அமைக்கப்பட்டு உள்ளது. கரையில் சிமென்ட் தளம் அமைக்கும் பணி, அரைகுறையாக உள்ளது.மேலும், கடந்த ஆண்டு ஜூன் மாதம், தடுப்பணையில் இருந்து திருவள்ளூர் வீரராகவர் கோவில் குளத்திற்கு பெட்டி குழாய் (கான்கிரீட்டால் ஆன பாக்ஸ் குழாய்) அமைக்கும் பணிக்கு அளவெடுக்கும் பணி நடந்தது. ஆனால், அந்த பணியும் அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது.இதுகுறித்து விசாரித்த போது, பட்டரைபெரும்புதுாரில் இருந்து திருவள்ளூர் வரை சாலையோரமாக பெட்டி கால்வாய் அமைக்க, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை துறையின் அனுமதி கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், பெட்டி கால்வாய் அமைக்காததால், கொற்றலை ஆற்று நீர் வீரராகவர் கோவிலுக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.இந்த பிரச்னையை, அரசு நிவர்த்தி செய்து, திட்டத்தை நிறைவேற்றி தர வேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
தடையில்லா சான்று கிடைக்கும்பட்டரைபெரும்புதுாரில் தடுப்பணை கட்டும் பணி நிறைவடைந்து விட்டது. அங்கிருந்து திருவள்ளூர் வரை சாலையோரம் குழாய் அமைக்க, தேசிய நெடுஞ்சாலை துறையின் தடையில்லா சான்று கிடைத்து விட்டது. மாநில அரசின் தடையில்லா சான்றுக்காக விண்ணப்பித்து உள்ளோம். சான்று கிடைத்ததும். உடனடியாக குழாய் அமைக்கும் பணி துவங்கும்.பொதுப்பணி துறை அதிகாரி, திருவள்ளூர்


மாநில அரசு உறுதுணைபட்டரைபெரும்புதுார் தடுப்பணையிலிருந்து கோவில் குளம் வரை, பெட்டி குழாய் அமைக்க அனுமதி பெற்று தருமாறு தமிழக முதல்வர், செயலர்களிடம் நேரடியாக பேசியுள்ளோம். அவர்களும், தேசிய நெடுஞ்சாலை துறையினரிடம் உரிய அனுமதி பெற்று, விரைவில் பெட்டி கால்வாய் அமைத்து தருவதாக உறுதி அளித்து உள்ளனர்.வீரராகவர் கோவில் நிர்வாகி, திருவள்ளூர்


ஆறு மாதத்தில் முடிவடையும்பட்டரைபெரும்புதுார் கொற்றலை ஆற்றில் தடுப்பணை கட்டி முடிக்கப்பட்டு விட்டது. தடுப்பணையின் உட்பகுதியில், கரையை பலப்படுத்தி, சிமென்ட் தளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணி முடிந்ததும், நீர்தேக்கத்தின் உட்பகுதியில் இருந்து, திருப்பதி தேசிய நெடுஞ்சாலையின் கீழ் உள்ள பாலம் வழியாக, தொட்டி குழாய் பதிக்கப்படும்.அங்கிருந்து, சாலையின் இடதுபுறமாக, 14 கி.மீ., துாரத்தில் அமைந்து உள்ள திருவள்ளூர் வீரராகவர் கோவில் குளம் வரை குழாய் பதிக்கப்படும். கான்கிரீட்டால் ஆன, முழுக்க, முழுக்க மூடப்பட்டதாக இக்குழாய் இருக்கும். குழாயில் மண் அடைப்பு ஏற்பட்டால் அதை அகற்ற, 30 முதல் 50 மீட்டர் துாரத்திற்கு ஒரு, 'மேன் ஹோல்' அமைக்கப்படும். நெடுஞ்சாலை துறையினர் அனுமதி அளித்தால், பணி துவங்கி ஆறு மாதத்திற்குள் நிறைவு பெற்று விடும்.தடுப்பணை பணி மேற்பார்வையாளர், பட்டரைபெரும்புதுார்


தடுப்பணை பணி நிறைவு• கொற்றலை ஆற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையின் நீளம், 100 மீட்டர். ஆற்றின் தரைமட்டத்தில் இருந்து, 3.5 மீட்டர் ஆழத்தில் தடுப்பு சுவர் கட்டப்பட்டு உள்ளது. ஆற்றுக்குள் பதிக்கப்பட்ட தடுப்புச்சுவர் அகலம், கீழ்மட்டத்தில், 3 மீட்டர் முதல் ஆற்றின் மேற்பகுதியில், 1.20 மீட்டர் அகலத்தில் கோபுரம் போல் அமைக்கப்பட்டு உள்ளது• ஆற்றின் தரைமட்டத்தில் இருந்து, 1.20 மீட்டர் உயரத்தில் தடுப்புச் சுவர் கட்டப்பட்டு உள்ளது. ஆற்றில் தண்ணீர் வந்தால் இந்த அளவு வரை, தண்ணீர் தேங்கும். அதிகளவில் தண்ணீர் வந்தால், வடிந்து, பூண்டி நீர்தேக்கத்திற்கு சென்று விடும்• தடுப்பணையின் இரண்டு கரை பகுதிகளிலும், 1.20 மீட்டர் அகலத்தில் இரண்டு மதகுகள் வீதம், நான்கு மதகுகள் கட்டப்பட்டு உள்ளன. இதன் ஷட்டர்கள், ஆற்றின் தரை மட்டத்தில் இருந்து அமைக்கப்படும்• தடுப்பணையில் இருந்து, வீரராகவர் கோவில் குளத்திற்கு குழாய் அமைக்கப்பட உள்ள இடம் வரை, 120 மீட்டர் நீளத்திற்கு, 8.30 மீட்டர் உயரத்தில் தடுப்பு சுவர் அமைக்கப்பட உள்ளது.

மூலக்கதை