சிறப்பு அதிகாரி நிர்வாகத்தில் மாநகராட்சி...50/100:எட்டு மாதங்களில் சாதித்தது என்னென்ன?

தினமலர்  தினமலர்
சிறப்பு அதிகாரி நிர்வாகத்தில் மாநகராட்சி...50/100:எட்டு மாதங்களில் சாதித்தது என்னென்ன?

சென்னை மாநகராட்சி நிர்வாகம், சிறப்பு அதிகாரியின் கட்டுப்பாட்டின் கீழ் வந்து, எட்டு மாதங்கள் ஆகின்றன. மக்கள் பிரதிநிதிகளின் கையில் மாமன்றம் இருந்ததை விட, அதிகாரிகளின் கட்டுப்பாட்டில், சென்னை மாநகராட்சி, ஓரளவிற்கு சிறப்பாக உள்ளது என, மக்கள் தெரிவித்தனர்.சென்னை மாமன்றம், மக்கள் பிரதிநிதிகளின் பிடியில் இருந்த போது, ஊழல், அடாவடி, கமிஷன் என, அனைத்து துறைகளிலும், படு மோசமான நிலையில் இருந்தது.
நிதி நெருக்கடி
மேயர் மற்றும் கவுன்சிலர்கள், தங்கள் புகழ்பாடவே, அரசு விழாக்களை நடத்தினர். மக்கள் நலதிட்ட ஒப்பந்தங்களில், கமிஷன் என்ற பெயரில், மக்கள் வரிப்பணத்தை சூறையாடினர். இவர்களின் அடாவடி தாங்காமல், 'இந்த ஆட்சி காலம் எப்போது முடியும்' என, சென்னை வாசிகள் புலம்பினர்.இந்த மாமன்றத்தின் பதவிக்காலம், கடந்த ஆண்டு அக்., 25ம் தேதியுடன் முடிந்தது. உள்ளாட்சி தேர்தல் தேதி, பல்வேறு பிரச்னைகளால், தள்ளி போடப்பட்டு வருகிறது.இதனால், மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயனை, மாநகராட்சிக்கான சிறப்பு அதிகாரியாக, அரசு நியமித்தது. அவரது நிர்வாகத்தில், எட்டு மாதங்களாக மாநகராட்சி நிர்வாகம் இயங்கி வருகிறது. கார்த்திகேயன், ஏராளமான பணியிட மாறுதல்களும், பதவி உயர்வுகளும், பணியிட நீக்கம் போன்ற நடவடிக்கைகளையும் மட்டுமே எடுத்தார்.
கடுமையான நிதி நெருக்கடியில் உள்ள மாநகராட்சியை, நிதிச்சுமையில் இருந்து மீட்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது; அது நடக்கவில்லை. வருவாயை பெருக்க பெரிய நடவடிக்கை எதுவும் இல்லை.அதே சமயம், 'வர்தா' புயலின் போது, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது. புயலில் மரங்கள் சாய்ந்தன; பொது சொத்துக்கள் சேதமடைந்தன என்றாலும், பெரியளவில் உயிர் பலி ஏதும் ஏற்படவில்லை.
புயல் ஓய்ந்த பின், சீரமைப்பு பணிகளும் முடுக்கிவிடப்பட்டன. எட்டு மாதங்களில் வர்தா புயல் நிவாரண பணிகளை தவிர, வேறு எந்த பெரிய முன்னேற்றமும் இல்லை.சிறப்பு அதிகாரி நிர்வாகத்தில், இதுவரை, 199 பணிகளுக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்த பணிகளின் மதிப்பு, 64 கோடி ரூபாய். இவற்றில் 75 சதவீத பணிகள், வர்தா புயல் நிவாரண பணிகளாகும். பேருந்து சாலைகள் துறை மூலம் புயலுக்கு சேதமடைந்த சாலைகள், பேருந்து நிழற்குடைகள், நடைபாதைகள், சாலை மையத்தடுப்புக்கள் ஆகியவை சீரமைக்கும் பணிகளுக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளன.
மத்திய அரசு ஒப்பந்தம்
சுகாதார துறை, குடும்ப நலத்துறைகளில் ஒப்பந்த பணியாளர்கள் நியமனத்திற்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளன. பாலங்கள் துறையில் சில சிறுபாலங்கள் வேலைகளுக்காக பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. மின்துறையில், அதிகபட்சமாக, 132 பணிகளுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. மிக முக்கியமான கட்டமைப்பு திட்டங்கள் அடுத்த நகர்விற்கு கூட செல்லாத நிலையே உள்ளது.
மத்திய அரசின் அழுத்தம் காரணமாக, திடக்கழிவு மேலாண்மை திட்டங்களை, பெருங்குடி, கொடுங்கையூரில் செயல்படுத்த அத்துறை தீவிரம் காட்டி வருகிறது. அதே போல, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், சற்று வேகம் காணப்படுகிறது.எட்டு மாதங்களாக, மாநில அரசு நிதியிலும், மாநகராட்சி பொது நிதியிலும் புதிய பணிகள் எதுவும் துவங்கப்படவில்லை. கடன் பெற்று செய்யப்படும் மழைநீர் வடிகால் திட்டம், பூங்காக்களை மேம்படுத்தும் திட்டம் ஆகியவை கூட, மந்தகதியில் தான் நடந்து வருகின்றன.
கட்டமைப்பு பணிகளின் நிலவரம் இப்படி இருக்க, குப்பை அகற்றுதல், கொசுக்களை கட்டுப்படுத்துதல், எரியாத மின் விளக்குகளை சீரமைத்தல் ஆகிய அன்றாட பணிகளில் கூட பெரும் சுணக்கம் காணப்படுகிறது.கவுன்சிலர்கள் பதவிக்காலம் முடிந்த பிறகும், அவர்களின் தலையீடு இருப்பதால், வார்டு பொறியாளர்கள் முதல் மாநகராட்சி உயர் அதிகாரிகள் வரை, மக்கள் நலத்திட்டங்களை முழுமையாக செயல்படுத்த முடியவில்லை.
பணிகளுக்கு லஞ்சம்
மேயர், கவுன்சிலர்களை கொண்ட மாநகராட்சி நிர்வாகம் பதவியில் இருந்த போது, கட்டிங், கமிஷன் கலாசாரம் பெரிதாக பேசப்பட்டது. அவர்கள் பதவிக்காலம் முடிந்த பிறகு, இவை எல்லாம் ஓய்ந்துவிடும் என்றும் கூறப்பட்டது. ஆனால், ஒரு சில விஷயங்களை தவிர, வழக்கமான பணிகளுக்கான கமிஷனை, கவுன்சிலர்களின் பங்கையும் சேர்த்து அதிகாரிகள் வாங்கிக் கொண்டு தான் இருக்கின்றனர்.
இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் முறைப்படி நடந்து, மக்கள் பிரதிநிதிகளை கொண்ட ஒரு மாநகராட்சி நிர்வாகம், ஜனநாயகத்திற்கு ஏற்றது. ஆனால், தகுதியான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்காவிட்டால், மாநகராட்சி மீண்டும் குட்டி சுவராகிவிடும்.- நமது நிருபர் -

மூலக்கதை