வைகை அணையில் இருந்து மதுரைக்கு 3வது குடிநீர் திட்டம்நிராகரிப்பு:தினமலர் செய்தி எதிரொலி; மாற்று திட்டத்திற்கு உத்தரவு

தினமலர்  தினமலர்
வைகை அணையில் இருந்து மதுரைக்கு 3வது குடிநீர் திட்டம்நிராகரிப்பு:தினமலர் செய்தி எதிரொலி; மாற்று திட்டத்திற்கு உத்தரவு

மதுரை;மதுரை மக்களின் தாகத்தை தணிக்கும் வைகை அணை தண்ணீர் இல்லாமல் வறண்டுள்ள நிலையில், 320 கோடி ரூபாயில் தயாரான வைகை 3வது குடிநீர் திட்டத்தை நிராகரித்தும், அதற்கு பதிலாக பெரியாறு அணைப் பகுதியில் இருந்து தண்ணீர் எடுப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும் அறிக்கை அனுப்ப நகராட்சி நிர்வாக ஆணையரகம் (சி.எம்.ஏ.,) உத்தரவிட்டுள்ளது.
வைகை அணையில் இருந்து மதுரைக்கு ஆண்டிற்கு முதலாவது கூட்டுக்குடிநீர் திட்டம் 1 ல் 900 மில்லியன் கனஅடி, 2வது திட்டத்தில் 600 மில்லியன் கனஅடி தண்ணீர் எடுக்கப்படுகிறது. தற்போது மதுரை 100 வார்டுகளாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதால் கூடுதலாக ஆண்டிற்கு 800 மில்லியன் கனஅடி தண்ணீர் எடுக்கும் திட்டம் தயார் செய்யப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கு முன் மேட்டூர் அணையில் இருந்து 245 கி.மீ., ல் உள்ள மதுரைக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டம், தாமிரபரணி ஆற்றில் இருந்து 225 அடி உயரத்தில் உள்ள மதுரைக்கு கொண்டு வரும் திட்டங்கள் ஆய்வுக்கு எடுக்கப்பட்டது. அதிக செலவினங்கள் காரணமாக இவற்றை மாநகராட்சி நிராகரித்தது. 2014ம் ஆண்டில் முல்லை பெரியாறு (லோயர் கேம்ப்) அணைப் பகுதியில் இருந்து குழாய் மூலம் குடிநீர் கொண்டுவர 580 கோடி ரூபாயில் திட்டம் தயார் செய்யப்பட்டது.பெரியாறு அணை நீர் பிரச்னை அப்போது இருந்ததால் சென்னையில் அதிகாரிகள் இதற்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. மட்டுமின்றி வைகை அணையில் இருந்தே 3வது குடிநீர் திட்டத்தை துவக்க அறிவுறுத்தியது. இத்திட்டத்திற்கு பெரியாறு அணையில் இருந்தும் கூடுதல் தண்ணீர் திறப்பதற்கு வழிவகை செய்யப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் 3வது குடிநீர் திட்டத்தை மாநகராட்சி தயார் செய்தது. இதை மத்திய அரசின் அம்ரூட் திட்டத்தில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.
மத்திய அரசின் மானியம் 106.66 கோடி ரூபாய், மாநில அரசின் மானியம் 64 கோடி ரூபாய், மாநகராட்சியின் பங்களிப்பு தொகை 149.34 கோடி ரூபாய் என ஒதுக்கீடுகள் செய்யப்பட்டது. இத்திட்டத்தை குடிநீர் வடிகால் வாரியம் மூலம் நிறைவேற்ற கடந்த அக்., 28ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
''ஏற்கனவே 2 குடிநீர் திட்டங்களுக்கே வைகை அணையில் இருந்து தண்ணீர் எடுக்க முடியாத நிலையில் அணை வறண்டு விடுவதால் 3வது குடிநீர் திட்டத்தை ஏற்படுத்துவதால் இதற்கு எப்படி தண்ணீர் கிடைக்கும் என்ற மில்லியன் டாலர் கேள்வி எழும்பிஉள்ளது என அக்., 30 ல் தினமலர் செய்தி வெளியிட்டது. இந்த திட்டத்திற்கு பதிலாக மாற்று திட்டங்களை ஏற்படுத்த வேண்டும். வைகை அணையில் இருந்து 3வது குடிநீர் திட்டம் பல கோடி செலவில் ஏற்படுத்தினாலும் கோடை காலங்களில் இப்போதையை நிலை தான் இருக்கும் என அந்த செய்தியில் தெளிவுபட குறிப்பிடப்பட்டது.
இதன் எதிரொலியாக சென்னையில் சி.எம்.ஏ., அதிகாரிகள் மீண்டும் இத்திட்டத்தை பல முறை ஆய்வு செய்து, இது வீணான, தேவையற்ற திட்டமாக மாறிவிடும் என முடிவுக்கு வந்தனர். இதற்கு மாற்றாக பெரியாறு அணை தண்ணீரை பெறும் வகையில் திட்ட அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மாநகராட்சிக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதன் அடிப்படையில் ஏற்கனவே 2014 ம் ஆண்டு தயார் செய்யப்பட்டுள்ள திட்ட அறிக்கையை மையமாக வைத்து மீண்டும் சில மாற்றங்களுடன் திட்டத்தை அரசுக்கு மாநகராட்சி அனுப்பியுள்ளது.

மூலக்கதை