மதுக்கடையை அகற்றக் கோரி முற்றுகை:காரைக்குடியில் பெண்கள் எதிர்ப்பு

தினமலர்  தினமலர்

காரைக்குடி:காரைக்குடி, கணேசபுரம் டாஸ்மாக் கடையை மூடக் கோரி அப்பகுதி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.காரைக்குடி, கணேசபுரம் சந்தைபேட்டை பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள மக்கள், சந்தைபேட்டை டாஸ்மாக் கடையை தாண்டித்தான் நகர் பகுதிக்குள் வர வேண்டி உள்ளது.
திறந்தவெளியில் மது அருந்துபவர்கள் பெண்களை கேலி செய்வதும்,ஆண்களை வழிமறித்து மதுவுக்கு பணம் கேட்பதும் தொடர்கிறது. இக்கடையை மூடக் கோரி இப்பகுதியினர் பல ஆண்டுகளாக போராடியும், கலெக்டரிடம் மனு கொடுத்தும் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று மதியம் 12 மணியளவில் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, கடை முன் முற்றுகையிட்டனர்.மேற்பார்வையாளர் ஜான்பீட்டர் கடையை திறந்து உள்ளே சென்று விட்டார். போலீசார் டாஸ்மாக் கடைக்கு பாதுகாப்புக்காக நின்றனர்.தெற்கு இன்ஸ்பெக்டர் வின்சென்ட் பேச்சுவார்த்தை நடத்தினார். ஒரு வாரம் கழித்து கடையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதையடுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராட்டம் நீடித்தது.
ராசாத்தி, கருணாநிதி நகர்: இப்பகுதியை சேர்ந்த பலர் இந்த மதுக்கடையால் கணவரை இழந்து நிர்கதியாக நிற்கின்றனர். சந்தை நடக்கும் நாளில், பெண்கள் பொருட்கள் வாங்க செல்ல முடிவதில்லை. மதுக்கடையை மூடாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம், என்றார்.

மூலக்கதை