மான் கீ பாத் நிகழ்ச்சியில் இஸ்லாமியர்களுக்கு மோடி ரம்ஜான் நோன்பு வாழ்த்து

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மான் கீ பாத் நிகழ்ச்சியில் இஸ்லாமியர்களுக்கு மோடி ரம்ஜான் நோன்பு வாழ்த்து

டெல்லி: மனதின் குரல் என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் இஸ்லாமியர்களின் புனித மாதமான ரம்ஜான் மாதத்தில் நோன்பு தொடங்கியுள்ளதற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மனதின் குரல் எனும் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசுவது வழக்கம். அதன்படி இன்று 32-ஆவது வாரமாக அவர் பேசினார். மத்திய பாஜக ஆட்சி பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் முதல்முறையாக அவர் பேசினார்.

கடந்த மாத நிகழ்ச்சியில் அவர் ஆற்றிய உரையில் பல்வேறு முக்கிய விவகாரங்களை அவர் விவாதித்தார். அதில் குறிப்பாக நாட்டில் கடைபிடிக்கப்படும் விஐபி கலாச்சாரம், ஏழை, பணக்காரர்களுக்கான இடைவெளி, கோடை விடுமுறைகளில் மாணவர்களை புதுமையான விஷயங்களை செய்ய ஊக்குவிப்பது உள்ளிட்டவை குறித்து பேசியிருந்தார்.

இந்த நிலையில் நாட்டு மக்களுக்கு அவர் இன்று ஆற்றிய உரையில் இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான் நோன்புக்கான வாழ்த்துகளை தெரிவித்தார். அப்போது அவர் மேலும் பேசுகையில், பாஜக அரசின் 3 ஆண்டுகால சாதனைகள் குறித்து பல்வேறு தொலைகாட்சி சேனல்கள் விவாதங்கள் நடத்தி வருவது வரவேற்கத்தக்கது.

மத்திய பாஜக அரசின் 3 ஆண்டு சாதனைகள் குறித்து ஆய்வுகள், வாக்குப்பதிவு போன்ற கருத்துகணிப்பு ஆகியவற்றில் சிலர் பாராட்டுகின்றனர், சிலர் ஆதரவளிக்கின்றனர், இன்னும் சிலரோ குறை கூறுகின்றனர். ஆக்கப்பூர்வமான விமர்சனங்களே ஜனநாயகத்தை வலுப்படுத்தும். உயிரோட்டமுள்ள ஜனநாயகம் வேண்டும் என்றால் இதுபோன்ற விமர்சனங்கள் முக்கியமானவை. அதற்கு பதில் அளிக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் மக்களாகிய நீங்கள் எனக்கு பிரதமர் என்ற பணியை வழங்கியுள்ளீர்கள். பல்வேறு கருத்துக் கணிப்புகள், ஆலோசனைகள் வழங்கிய மக்களுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். உங்கள் ஆலோசனைகள், விமர்சனங்களுக்கு நான் மதிப்பளிக்கிறேன். இவை எங்கள் அரசின் பலவீனங்களை சரிபடுத்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளன. கருத்து கணிப்புகளை மத்திய அரசு பாடமாக எடுத்துக் கொண்டுள்ளது.

இந்த ரம்ஜான் நோன்பானது அமைதி, ஒற்றுமை, நல்லெண்ணங்கள் ஆகியவை நாட்டில் மேலோங்க உதவி புரியும். கலாச்சார வேற்றுமையே இந்தியாவின் பலமாகும். உலகில் பல்வேறு மதங்களை சார்ந்து இந்தியாவில் வசிக்கும் மக்கள் அமைதி, ஒற்றுமை, நல்லெண்ணம் ஆகியவற்றை கடைப்பிடிப்பதற்கு 125 கோடி இந்தியர்களும் பெருமைப்பட வேண்டிய விஷயமாகும்.

குப்பைக் கழிவுகளை கழிவுகளாக நாம் பார்க்கக் கூடாது. அவை அனைத்தும் பொக்கிஷங்கள். திட கழிவு மேலாண்மைக்காக பல்வேறு புதிய வழிமுறைகளை நாம் கண்டறிய தொடங்கிவிட்டோம். தூய்மை இந்தியா திட்டம் இன்று மக்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. சுகாதாரம் குறித்த செய்தியை மக்களுக்கு கொண்டு சேர்த்ததில் ஊடகங்கள் பெரும் பங்கு வகித்தன. சுதந்திரத்துக்காக இந்தியா முழுவதும் உள்ள மக்கள் சிறையில் இருந்துள்ளனர். இந்திய சுதந்திர போராட்டத்தில் வீர் சவர்காரின் பங்கு மறக்கமுடியாது என்றார் மோடி.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மூலக்கதை