வைர விழாவை அரசியலில் திருப்பு முனையை ஏற்படுத்தும் விழாவாக்க வேண்டும்... ஸ்டாலின் கடிதம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வைர விழாவை அரசியலில் திருப்பு முனையை ஏற்படுத்தும் விழாவாக்க வேண்டும்... ஸ்டாலின் கடிதம்

சென்னை: கருணாநிதியின் வைர விழாவை அரசியலில் திருப்பு முனையை ஏற்படுத்தும் விழாவாக்க வேண்டும் என ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். மருத்துவ காரணங்களுக்காக சிறிது ஓய்வெடுக்கும் நிலையில், அவரது இலட்சியங்களை நிறைவேற்ற நாம் தொடர்ந்து உழைப்பதே அவருக்கு நாம் வழங்கும் பிறந்தநாள் பரிசாக அமையமுடியும் என்றும் ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அந்தக் கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:

94வது பிறந்தநாளில் கூடுதல் சிறப்பாக, சட்டமன்றப் பணிகளுக்கான வைரவிழா ஆண்டும் இணைந்து நம்மை இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 70 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்கள் மத்தியிலும் மாநிலத்திலும் இயங்கி வருகின்றன. இதில் 60 ஆண்டுகால தொடர்ச்சியான சட்டமன்ற அனுபவமோ, நாடாளுமன்ற அனுபவமோ கொண்டவர்களைத் தேடிப் பார்த்தால், கருணாநிதியைத் தவிர வேறு எவரையும் அடையாளம் காட்டிட முடியாது. தமிழக வரலாற்றில் மட்டுமின்றி, இந்திய ஜனநாயக வரலாற்றிலும் சாதனை மிக்க தலைவர் கருணாநிதி.

1957 ல் குளித்தலை தொகுதியில் தொடங்கியது அவரது வெற்றிப் பயணம். 1962 ல் தஞ்சை, 1969, 1971 தேர்தல்களில் சைதாப்பேட்டை, 1977, 1980 தேர்தல்களில் அண்ணாநகர், 1989, 1991 தேர்தல்களில் துறைமுகம், 1996, 2001, 2006 எனத் தொடர்ச்சியாக சேப்பாக்கம், 2011, 2016 என இருமுறை திருவாரூர் என அவரது வெற்றிப் பயணம் ஓயவேயில்லை. கடந்த 2016 தேர்தலில் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற சாதனையையும் நிகழ்த்திக் காட்டியவர்.

ஒரே கட்சி, ஒரே சின்னம், 13 முறை தேர்தல் களத்தில் போட்டி, அத்தனையிலும் வெற்றி, 5 முறை முதல்வராகப் பொறுப்பேற்று 18 ஆண்டுகள் அந்தப் பொறுப்பினில் சிறப்பாக செயல்பட்டு, தமிழகத்தில் அதிககாலம் முதல்வராகப் பணியாற்றியவர்.சட்டமன்ற மேலவையின் உறுப்பினராகவும் அவர் திறம்பட பணியாற்றியுள்ளார். ஆளுங்கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் சட்டமன்ற செயல்பாடுகளில் வாதத் திறமையாலும், கண்ணியமான வார்த்தைகளாலும் எதிர்த்தரப்பின் இதயத்தையும் கவர்ந்தவர்

பெண்களுக்கு சொத்துரிமைச் சட்டத்தை நிறைவேற்றியவர், அனைத்து சாதியினரும் அர்ச்சகராக சட்டமியற்றி, முறையான பயிற்சி அளித்தவர். குடிசை மாற்று வாரியத்தை இந்தியாவிலேயே முதன்முறையாக உருவாக்கி ஏழைகளை மாடிகளில் குடியேற்றியவர். பேருந்துகளை நாட்டுடைமையாக்கி அரசுடைமையாக்கியவர். கை ரிக் ஷாவை ஒழித்து சைக்கிள் ரிக் ஷாக்களைக் கொண்டு வந்தவர். ஏழை எளியோரும் உயர் சிகிச்சை பெறும் வகையில் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் தந்தவர். சாதி சமய ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் அமைய சமத்துவபுரங்களை உருவாக்கியவர். தொழிலாளர் தினமான மே நாளுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளித்தவர்.

மெட்ராஸ் என உச்சரித்த இந்திய உதடுகளை சென்னை என உச்சரிக்க வைத்தவர். மாற்றுத்திறனாளிகள் என்ற சொல்லை அரசு வார்த்தையாக்கி, முதலமைச்சரின் அவர்களுக்கான திட்ட கண்காணிப்பை ஏற்படுத்தியவர்.

திருநங்கைகள் என மூன்றாம் பாலினருக்கு அங்கீகாரம் அளித்தவர். சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்ட அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அரசின் திட்டங்களால் பயன் கிடைக்கச் செய்ததில் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாகத் தமிழகத்தை உயர்த்தியவர்.

80 ஆண்டுகாலமாக தமிழ்ச் சமுதாயம் மேன்மையுற, ஓயாது உழைத்த தலைவர் அவர்கள், மருத்துவ காரணங்களுக்காக சிறிது ஓய்வெடுக்கும் நிலையில், அவரது இலட்சியங்களை நிறைவேற்ற நாம் தொடர்ந்து உழைப்பதே அவருக்கு நாம் வழங்கும் பிறந்தநாள் பரிசாக அமையமுடியும். மருத்துவர்கள் அனுமதித்தால், பிறந்தநாள் விழாவில் உங்களுடன் சேர்ந்து நானும் தலைவரின் முகம் பார்த்து, கரம் பற்றி, அவரின் வாழ்த்துகளைப் பெறுவதற்கு ஆவலாக இருக்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மூலக்கதை