இந்தியாவில் 3 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு: மத்திய அரசு உறுதி செய்தது'

தமிழ் முரசு  தமிழ் முரசு
இந்தியாவில் 3 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு: மத்திய அரசு உறுதி செய்தது

புதுடெல்லி: இந்தியாவில் 3 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது. உகாண்டாவில் கொசுக்கடியின் மூலமாக ஜிகா வைரஸ் முதன்முறையாக பரவியது.

கடந்த 1947ம் ஆண்டு அங்குள்ள ஜிகா என்ற காட்டில் குரங்குகளை தாக்கியதன் மூலம் தெரியவந்ததால் இதற்கு ஜிகா வைரஸ் என பெயரிடப்பட்டது. பின்னர் 1952ல் மனிதர்களையும் இந்த வைரஸ் தாக்கத் தொடங்கியது.

பின்னர் படிப்படியாக 2007 மற்றும் 2013களில் பசிபிக் நாடுகள், அமெரிக்க நாடுகளான பிரேசில், கொலம்பியா, ஆப்ரிக்கா என பரவ தொடங்கியது. மத்திய அமெரிக்க கண்டத்தில் உள்ள சுமார் 23 நாடுகளில் ஜிகா பாதிப்பு காரணமாக ஏராளமானோர் உயிரிழந்தனர்.



இதையடுத்து தற்போது ஜிகாவுக்கு எதிராக உலக சுகாதார நிறுவனம் சர்வதேச நாடுகளுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில் இந்தியாவில் ஜிகா பாதிப்பு இல்லை என்று கூறப்பட்டு வந்தது.

உலக சுகாதார நிறுவனத்திற்கு மத்திய அரசு அளித்துள்ள அறிக்கை ஒன்றில் 3 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உள்ளது என தெரிவித்துள்ளது.

2016ல்  பிப்ரவரி மாதம் 3 பேருக்கு இந்த பாதிப்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   ஜிகாவுக்கு இந்தியாவில் தான் முதன்முறையாக தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை