வைரவிழா நாயகர் கருணாநிதியை வாழ்த்திட குவிந்திடுவோம்: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
வைரவிழா நாயகர் கருணாநிதியை வாழ்த்திட குவிந்திடுவோம்: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு

சென்னை: திமுக செயல் தலைவர் மு. க. ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதம்: ஏறத்தாழ 50 ஆண்டுகாலமாக தமிழக அரசியலின் ஆணி வேராக நிலைத்து, அச்சாணியாக செயல்படுபவர் கருணாநிதி. 14 வயதில் எந்தக் கையால் தமிழ்க்கொடியைப் பிடித்தாரோ அதே கையால் தமிழ் இலக்கியத்திற்கு உரமூட்டும் கருத்துகளை, தாம் ஏற்றுக்கொண்ட கொள்கை வழி நின்று, பத்திரிகை - நாடகம் - திரைப்படம் - தொலைக்காட்சி, கவியரங்க மேடைகள் என அனைத்து வகை ஊடகங்கள் வழியாக, பாமரர் முதல் பண்டிதர் வரை அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் வகையில் செயலாற்றிய முத்தமிழறிஞர்.
இத்தனைப் பெருமைகள் கொண்ட தலைவர் கருணாநிதியின் 94வது பிறந்தநாளில் கூடுதல் சிறப்பாக, சட்டமன்றப் பணிகளுக்கான வைரவிழா ஆண்டும் இணைந்து நம்மை இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

60 ஆண்டுகால தொடர்ச்சியான  சட்டமன்ற அனுபவமோ, நாடாளுமன்ற அனுபவமோ கொண்டவர்களைத் தேடிப் பார்த்தால், தலைவர் கருணாநிதியை தவிர வேறு எவரையும் அடையாளம் காட்டிட முடியாது. தமிழக வரலாற்றில் மட்டுமின்றி, இந்திய ஜனநாயக வரலாற்றிலும் சாதனை மிக்க தலைவராக கருணாநிதி இடம்பிடித்திருக்கிறார்.

1957 ல் குளித்தலை தொகுதியில் தொடங்கியது அவரது வெற்றிப் பயணம்.

1962 ல் தஞ்சை, 1969, 1971 தேர்தல்களில் சைதாப்பேட்டை, 1977, 1980 தேர்தல்களில் அண்ணாநகர், 1989, 1991 தேர்தல்களில் துறைமுகம், 1996, 2001, 2006 எனத் தொடர்ச்சியாக சேப்பாக்கம், 2011, 2016 என இருமுறை திருவாரூர் என அவரது வெற்றிப் பயணம் ஓயவேயில்லை. கடந்த 2016 தேர்தலில் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற சாதனையையும் நிகழ்த்திக் காட்டியவர் தலைவர் கலைஞர்.

ஒரே கட்சி, ஒரே சின்னம், 13 முறை தேர்தல் களத்தில் போட்டி, அத்தனையிலும் வெற்றி, 5 முறை முதல்வராகப் பொறுப்பேற்று 18 ஆண்டுகள் அந்தப் பொறுப்பினில் சிறப்பாக செயல்பட்டு, தமிழகத்தில் அதிககாலம் முதல்வராகப் பணியாற்றியவர் என்ற பெருமையும் தலைவர் கருணாநிதி. எதையும் புள்ளிவிவரங்களுடனும், ஆதாரங்களுடனும் எடுத்து வைப்பது தலைவர் கருணாநிதியின் சிறப்பு.

எதிர்க்கட்சியாக இருந்த தருணங்களில், ஆளுங்கட்சியின் மீதான குற்றச்சாட்டுகளுக்கு அடுக்கடுக்கான ஆதாரங்களை அடுக்கிய வரலாறுகள் நிறைய உண்டு.

தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் என்றால் கோபாலபுரம் இல்லத்திலும், அண்ணா அறிவாலயத்திலும் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் ஆயிரக்கணக்கில் குவிந்து, அன்புப் பரிசுகளை வழங்கி வாழ்த்துபெற்று மகிழ்வது வழக்கம்.

தற்போது உடல்நலன் குன்றியிருக்கும் தலைவர் கருணாநிதி, மருத்துவர்களின் முழுமையான கண்காணிப்பில் இருக்கின்ற காரணத்தால், அவர்களின் அறிவுரைப்படி செயல்பட வேண்டிய நிலையில் இருக்கிறோம். 80 ஆண்டுகாலமாக தமிழ்ச் சமுதாயம் மேன்மையுற, ஓயாது உழைத்த தலைவர், மருத்துவ காரணங்களுக்காக சிறிது ஓய்வெடுக்கும் நிலையில், அவரது இலட்சியங்களை நிறைவேற்ற நாம் தொடர்ந்து உழைப்பதே அவருக்கு நாம் வழங்கும் பிறந்தநாள் பரிசாக அமையமுடியும்.

மருத்துவர்கள் அனுமதித்தால், பிறந்தநாள் விழாவில் உங்களுடன் சேர்ந்து நானும் தலைவரின் முகம் பார்த்து, கரம் பற்றி, அவரின் வாழ்த்துகளைப் பெறுவதற்கு ஆவலாக இருக்கிறேன். ஜூன் 3ம் தேதி சென்னை மாநகரத்தில் திரண்டிடுவோம்.

தமிழகத் தலைநகர் கட்சி தொண்டர்களால் கறுப்பு - சிவப்பு கடலாகட்டும்.

இந்தியத் தலைநகர் வரை அதன் அலை வீசட்டும்.

.

மூலக்கதை