மாட்டிறைச்சி சாப்பிடக் கூடாது என்று யார் சொன்னது? அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் திடீர் பல்டி

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மாட்டிறைச்சி சாப்பிடக் கூடாது என்று யார் சொன்னது? அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் திடீர் பல்டி

சென்னை: மாடுகளை இறைச்சிக்காக வெட்டுவதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதற்கு தமிழ்நாட்டில் பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆனால் மாநில அரசு சார்பில் எந்த முடிவும் தெளிவாக இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பதால் மாட்டிறைச்சி உண்பவர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது.

இந்நிலையில் இதுபற்றி மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அளித்துள்ள பேட்டியில்,

" மாட்டிறைச்சி சாப்பிடக் கூடாது என்று யார் சொன்னது? மத்திய அரசு அப்படி சொல்ல வில்லையே. தவறான புரிதலுடன் சொல்கிறார்களா? அல்லது திரித்து மக்களை திசை திருப்ப முயற்சிக்கிறார்களா? என்று தெரியவில்லை.

மாடு, ஆடு, கோழி எதை வேண்டுமானாலும் சாப்பிடட்டும். அது அவரவர் விருப்பம். ஆனால் சில விலங்குகளைப் பாதுகாக்க வேண்டிய கடமை உண்டு. மாடுகள் நமது செல்வங்கள். விவசாயத்துக்கும், கிராம மக்களின் வாழ்க்கை தரம் உயர்வுக்கும் மாடுகள்தான் உயிர்நாடி.

இந்த மாட்டு செல்வங்கள் இறைச்சிக்காகவும், தோலுக்காகவும் கொள்ளை போகின்றன. அதை பாதுகாக்க வேண்டியது ஒரு அரசின் கடமை இல்லையா? நேரு காலத்திலேயே மாடுகள் பாதுகாப்புக்கான சட்டங்கள் இருக்கிறது.

ஆனால் அவர்கள் சட்டத்தை போட்டு விட்டு அமல்படுத்துவதில்லை. பல மாநிலங்களில் ஏற்கெனவே இந்த சட்டங்கள் உள்ளன. இப்போது மத்திய அரசு அதை செயல்படுத்துகிறது. கசாப்பு கடைக்கு மாடுகளை விற்கும்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளைத்தான் அரசு வகுத்து கொடுத்துள்ளது.

எதற்கெடுத்தாலும் விதண்டாவாதம் பேசக் கூடாது. என் தட்டில் எதை வைத்து சாப்பிடுவது என்பது என் உரிமை என்பது சரிதான். அதற்காக மான் கறியை வைத்து சாப்பிட முடியுமா? ஒரு காலத்தில் பிள்ளை கறியை கூட சாப்பிட்டு இருக்கிறார்கள். ஆங்கிலேயர்கள் இந்தியர்களை கப்பலில் கொத்தடிமைகளாக கொண்டு சென்று விற்றார்கள். அதுபோல் இப்போதும் கொண்டு போக முடியுமா? காலத்துக்கு ஏற்ப சில நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியமாகிறது.

மாட்டுக்கறியை ஒரு குறிப்பிட்ட சாதி அல்லது மதத்தோடு மட்டுமே தொடர்புபடுத்தி பேசுவது ஏன்? மாட்டுக்கறியை எல்லோரும்தான் சாப்பிடுகிறார்கள். ஏன் ஒரு குறிப்பிட்ட மதத்தினரை மட்டும் குறிப்பிட்டு திசை திருப்புகிறார்கள். இத்தனை ஆண்டுகாலம் சாதியால், மதத்தால் மக்களை பிரித்து குளிர் காய்ந்தது காங்கிரஸ். மக்கள் இப்போது உண்மையை உணர்ந்து விட்டார்கள். நீங்கள் என்னதான் குட்டிக் கரணம் போட்டாலும் மக்களை திசை திருப்ப முடியாது." என்று தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மூலக்கதை