ரேஷன் வினியோகத்தில் குறைபாடு தேவையில் 'கட்'; அதிகாரிகள் மீது 'டவுட்'! பொருள்கள் கிடைக்காமல் பெரும்பாடு

தினமலர்  தினமலர்
ரேஷன் வினியோகத்தில் குறைபாடு தேவையில் கட்; அதிகாரிகள் மீது டவுட்! பொருள்கள் கிடைக்காமல் பெரும்பாடு

கோவை : கோவை மாவட்டத்தில் பொது வினியோகத் திட்டத்தின் கீழ், ரேஷன் கடைகளின் வாயிலாக வழங்கப்படும், ரேஷன் பொருட்களின் அளவு சமீப காலமாக குறைந்து வருகிறது. சில பொருட்கள் வினியோகிக்காமல் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.ஒரு பாதி கடத்தல்...கோவை மாவட்டத்தில், 1,402 ரேஷன் கடைகள் உள்ளன. 9.55 லட்சம் ரேஷன் கார்டுகள் புழக்கத்திலுள்ளன.55 சதவீதம் ரேஷன் கார்டுகளுக்கு ரேஷன் அரிசி வழங்கப்படுகிறது.குடும்ப உறுப்பினர்கள் நான்கு பேராக இருந்தால், அவர்களுக்கு, 20 கிலோ அளவுக்கு பச்சரிசியும், புழுங்கல் அரிசியும் இலவசமாக வழங்கப்படுகிறது. குறைந்த அளவில் குடும்ப உறுப்பினர்கள் இருந்தால் அதற்குத் தகுந்தாற் போல் அளவு குறைத்து வழங்கப்படுகிறது.ரேஷனில் வழங்கப்படும் அரிசி வகைகள் ஆந்திரா, கர்நாடக மாநிலங்களிலிருந்து, தமிழ்நாடு வாணிபக்கழகம் கொள்முதல் செய்து தமிழகத்தில் வினியோகிக்கிறது. கோவை மாவட்டத்துக்கு மாதந்தோறும், 16 ஆயிரம் மெட்ரிக் டன் ரேஷன் அரிசி வினியோகிக்கப்படுகிறது. வினியோகிக்கப்படும் ரேஷன் அரிசியில், 50 சதவீதம் மட்டுமேமக்கள் வாங்கி பயன்படுத்துகின்றனர்; மீதமுள்ள அரிசி கடை ஊழியர்களின் உதவியுடன் முறைகேடாக கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு கடத்தப்படுகிறது.அதேபோல், 2,300 டன் சர்க்கரையும், 1,100 டன் கோதுமையும், 400 டன் உளுந்தம்பருப்பும், 600 டன் துவரம் பருப்பும், 600 டன் பாமாயிலும், 1,284 கிலோ லிட்டர் கெரசினும், கோவையிலுள்ள, 1,402 ரேஷன் கடைகளின் வாயிலாக, 9,55,000 ரேஷன் கார்டு தாரருக்கு வினியோகிக்கப்படுகிறது.நம்பிக்கை இல்லைமாவட்ட வழங்கல் துறை, ஒவ்வொரு மாதத்துக்கும், ரேஷன் கடைகளில் வினியோகிக்கத் தேவையான ரேஷன் பொருட்களை கொள்முதல் செய்வதற்கு முன், கடந்த இரண்டு மாதங்களில், ஒவ்வொரு ரேஷன் கடையிலும் எந்த அளவு பொருட்கள் நுகர்வு செய்யப்பட்டுள்ளது என்பதை அதற்கான கணக்கீடுகளின் வாயிலாக கண்டறிவர்.இதை அடிப்படையாகக் கொண்டு, கடைவாரியாக பொருட்களின் தேவையை குறிப்பிட்டு, மொத்தமுள்ள ரேஷன் கடைகளுக்கு தேவையான அளவை முடிவு செய்வர். அதன்பின்பே ஒட்டு மொத்த மாவட்டத்துக்குமான ரேஷன் பொருட்களின் அளவு மாநில அரசின் கீழுள்ள உணவுத்துறைக்கு அனுப்பப்படுகிறது.ரேஷன் கடை ஊழியர், அதிகாரிகள் மீது நம்பிக்கை இல்லாததால், அவர்கள் தரும் அளவீட்டில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை, உயர் அதிகாரிகள், 'கட்' செய்துவிட்டு, வேறு ஒரு அளவீடை முடிவு செய்து பரிந்துரைக்கின்றனர். அதன் படியே பொருட்கள் வாங்கி வினியோகிக்கப்படுகிறது.இதனால், கோவை மாவட்டத்தில், வழக்கமான அளவை விடக் குறைவாகவே ரேஷன் பொருட்கள் வினியோகிக்கப்படுகின்றன. இதனால், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அளவுக்குக் கூட பொருட்கள் கிடைக்காமல் மக்கள் திண்டாடுகின்றனர்.70 சதவீதமே...வழங்கல் துறை அதிகாரிகள் கூறியதாவது:கோவை மாவட்டத்துக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை நிர்ணயித்து அனுப்பும் அளவுக்கு பொருட்கள் வந்தன. ஆனால் தற்போது, கேட்கும் அளவுக்கு பொருட்கள் வருவதில்லை. நாங்கள் கேட்கும் அளவில், 70 சதவீதம் கூட பொருட்கள் வந்து சேருவதில்லை. அதனால் தான் இந்த தட்டுப்பாடு.ஒரு ரேஷன் கார்டுக்கு 20 கிலோ அளவில் வழங்கப்பட்ட அரிசி தற்போது சில கடைகளில் 15 கிலோவாக குறைக்கப்பட்டுள்ளது. பாமாயில் பெரும்பாலான கடைகளில் கிடைப்பதில்லை. கோதுமை சில கடைகளில் மட்டுமே கிடைக்கிறது. இதற்கான வாய்மொழி உத்தரவை ஏற்கனவே ரேஷன் கடைக்காரர்களிடம் பிறப்பித்துள்ளோம்.பொருளின் இருப்புக்கு தகுந்தாற்போல் இருப்பதை வைத்து அனைவருக்கும் வினியோகம் செய்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

மூலக்கதை