தொடருது அலட்சியம்:பஸ்களின் முதலுதவி பெட்டிகளில் இல்லை மருந்து:விபத்தின்போது கிடைப்பதில்லை மருத்துவ உதவிகள்

தினமலர்  தினமலர்

ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டத்தில் இயங்கும் அரசு மற்றும் தனியார் பஸ்களில் முதலுதவி மருந்துகள் இல்லை. வெறும் பெட்டியை மட்டும் வைத்துள்ளதை முறையாக ஆய்வு செய்யாமல் போக்குவரத்து துறை அதிகாரிகள் அனுமதி வழங்குவதால், விபத்தின்போது மருத்துவஉதவிகள் கிடைப்பதில்லை. இதன் மீதுசம்பந்தபட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கலெக்டர் அறிவுரை வழங்க வேண்டும்.
மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுபோக்குவரத்து கழகத்தின் சார்பில் விருதுநகர் கோட்டம் ஏற்படுத்தபட்டு, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், சிவகாசி, சாத்துார், விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி பகுதிகளில் போக்குவரத்து கழக டிப்போ அமைக்கபட்டு 400க்கு மேற்பட்ட பஸ்கள் இயங்கி வருகிறது. பல்வேறு பகுதிகளிலிருந்து நுாற்றுக்கு அதிகமான தனியார் பஸ்கள் இயங்கி வருகிறது.
பயிற்சியும் இல்லை
மோட்டார் வாகன சட்டத்தின்படி, ஒரு பஸ் இயக்க அனுமதி வழங்கும்போது அப்பஸ்களில் பெர்மிட் கடிதத்தின் நகல், ரூட் மேப், நேரக்கால அட்டவணை, கட்டணப்பட்டியல் விபரங்கள் பொதுமக்கள் பார்பைக்கு வைக்கப்படவேண்டும். ஒவ்வொரு பஸ்களிலும் மருந்துகளுடன் கூடிய முதலுதவி பெட்டிகள் வைத்திருக்கவேண்டும் என்பது அவசியம்.
ஆனால் தற்போது எந்த பஸ்சிலும் மேற்கண்ட விதிமுறைகள் முழுமையாக கடைபிடிக்கபடுவதில்லை. குறிப்பாக முதலுதவி பெட்டிகள் பெரும்பாலான பஸ்களில் வைக்கவில்லை. அப்படி பெட்டிகள் இருந்தாலும் தேவையான மருத்துவபொருட்கள் இருப்பதில்லை. விபத்துகளின் போது காயம்பட்டவர்களுக்கு எப்படி உதவவேண்டும் என்ற பயிற்சியும் பஸ் ஊழியர்களுக்கு வழங்கப்படுவதில்லை.
காலாவதி பொருட்களே
குறிப்பாக அரசு பஸ்களில் போக்குவரத்து விதிகள் என்றால் என்ன என கேட்கும் அளவிற்கு அதன் செயல்பாடுகள் உள்ளது. பல பஸ்களில் இருக்கைகள் சரியில்லை. பக்கவாட்டு கண்ணாடிகள் மற்றும் தகரங்கள் பயணிகளை பயமுறுத்துகிறது. முதலுதவி பெட்டி இருக்கு, அதுவும் சவப்பெட்டிபோல் அனைத்து பக்கங்களும் ஆணிவைத்து அடித்து வைத்தாற்போல் தான் உள்ளது. தேவையான மருந்து பொருட்கள் இல்லை, இருந்தாலும் காலாவதியான பொருட்கள் தான் உள்ளது.
எப்படிகட்டுபடுத்த முடியும்
இவ்வாறு அப்பட்டமாக விதிமீறலுடன் இயங்கும் பஸ்களில் முறையாக ஆய்வு செய்யவேண்டிய போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்வதில்லை.அதிலும் மருந்துகளுடன் கூடிய முதலுதவி பெட்டிகள் இருக்கிறதா என்பதை அக்கறையுடன் ஆய்வு செய்து அனுமதி வழங்குவதில்லை. அரசு சார்பு நிறுவனமே விதிமீறல் செய்வதும், அதை அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருக்கும்நிலையில், தனியார் பஸ்களை எப்படி கட்டுபடுத்த முடியும்.
இதன் மீது கலெக்டர் தக்க நடவடிக்கை எடுத்து, மாவட்டத்தில் இயங்கும் அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ்களில் இருக்கவேண்டிய தகவல்கள் மட்டுமின்றி, முதலுதவி பெட்டிகள் மருந்துகளுடன் இருக்கிறதா என்பதை உறுதிபடுத்த, போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு உத்திரவிடவேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.
மதிப்பதே இல்லை
ஸ்ரீவில்லிபுத்துார் காமராஜ், ''மாவட்டத்தில் புதிதாக பஸ்கள் இயக்கபடும்போது, வைக்கபடும் முதலுதவி பெட்டிகளே அப்பஸ்கள் கண்டம் ஆகும் வரை உள்ளது. இருக்கும் பெட்டிகளிலும் மருத்துவ பொருட்கள் இல்லை. அப்படி இருந்தாலும் அவைகள் காலாவதி ஆகித்தான் உள்ளது. இதை யாரும் ஒரு பொருட்டாக மதிப்பதேயில்லை. போக்குவரத்து துறை அதிகாரிகளும் ஆய்வின்போது பார்ப்பதில்லை. இதை வாரந்தோறும் ஆய்வு செய்து, அதன் விபரத்தை பெட்டிகளின் மீது ஒட்டவேண்டும்.இதற்கு கலெக்டர் நடவடிக்கைதான் மிகவும் அவசியமாகிறது,”என்றார்.

மூலக்கதை