சுகாதார கேடான கழிப்பறையால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உவ்வே

தினமலர்  தினமலர்

திண்டுக்கல்:திண்டுக்கல் கலெக்டர் அலுவலக கழிப்பறைகளில் சுகாதாரத்திற்கு இடமே இல்லாததால், உள்ளே நுழையும் பொதுமக்கள் 'உவ்வே'யென உடனே வெளியேறுகின்றனர். மாவட்டத்தையே நிர்வாகம் செய்யும் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் திங்கள் கிழமை தோறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. தங்கள் ஊரில் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை, சுகாதாரம், ஏரி, கண்மாய் என இல்லாத பிரச்னைகளுக்கு தீர்வு காண இங்கு வருகின்றனர். மாவட்ட உயரதிகாரிகளை சந்தித்து மனுக்களை அளிக்கின்றனர்.
அதற்கு தீர்வு காண மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கின்றனர். ஆனால் அந்த அதிகாரிகள் பணியாற்றும் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகமோ சுகாதார கேடின் உச்சமாக உள்ளது. குறிப்பாக இங்குள்ள அனைத்து கழிப்பறைகளும் துர்நாற்றத்துடன் உள்ளது. குறிப்பாக செய்தி மக்கள் தொடர்புத்துறை அருகில் இருக்கும் கழிப்பறை பகுதியில் யாரும் க(ந)டந்து செல்ல முடியவில்லை. இக் கழிப்பறைகளை சுத்தம் செய்து பல நாட்களாகி விட்டது. கழிவு நீர் தேங்கி நின்று சுகாதாரக்கேடை ஏற்படுத்துகிறது.
மனுக் கொடுக்க வரும் பொதுமக்கள் இந்த கழிப்பறைகளால் 'உவ்வே'யாகின்றனர். கலெக்டர் வினய் இங்கு பொறுப்பேற்ற போது, அனைத்து துறை அதிகாரிகளையும் அழைத்து வளாகம் பளிச்சிட நடவடிக்கை மேற்கொண்டார். அவரே துாய்மை பணியிலும் ஈடுபட்டார்.இதனால் கழிப்பறைகள் பளிச்சிட்டன. குப்பை எல்லாம் அப்புறப்படுத்தப்பட்டு வளாகம் துாய்மையானது. அதை தொடர்ந்து செயல்படுத்த அதிகாரிகள் ஏனோ முயற்சிக்கவில்லை. எல்லாவற்றையும் கலெக்டரே இருந்து பார்க்க வேண்டும் என நினைக்கிறார்களோ என்னவோ? தற்போது வளாகத்தில் குப்பைகள் பெருகி விட்டன. கழிப்பறைகளில் சுகாதாரம் இல்லாத நிலை நீடிக்கிறது. தினமும் பல நுாறு பேர் வந்து செல்லும் கலெக்டர் அலுவலகத்தின் சுகாதாரம் மேம்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மூலக்கதை