நிதி நெருக்கடியால் புதிய அறிவிப்புகள் இல்லை; நகராட்சி நிர்வாக துறையில் முடிவு

தினமலர்  தினமலர்
நிதி நெருக்கடியால் புதிய அறிவிப்புகள் இல்லை; நகராட்சி நிர்வாக துறையில் முடிவு

சென்னை : கடுமையான நிதி நெருக்கடியால், நடப்பாண்டில், நகராட்சி நிர்வாக துறையில் புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்பு எதுவும் இல்லை என முடிவு செய்யப்பட்டு உள்ளது.

நகராட்சி நிர்வாகம், பேரூராட்சிகள் இயக்குனரகம், சென்னை மாநகராட்சி, குடிநீர் வழங்கல் வாரியம், தமிழ்நாடு நகர்புற உள்கட்டமைப்பு நிதி சேவை நிறுவனம் உட்பட, நகராட்சி நிர்வாக துறையின் கீழ் வரும் அனைத்து உட்பிரிவு துறைகளின் உயர் அதிகாரிகளுடன், தலைமை செயலகத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, நேற்று முன்தினம் ஆய்வு கூட்டம் நடத்தினார்.

கூட்டத்தில், இதுவரை துறையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், அவற்றின் நிலை, செயல்பாட்டில் உள்ள திட்டங்களின் தற்போதைய நிலை ஆகியவை குறித்து துறை வாரியாக அமைச்சர் கேட்டறிந்தார். விரைவில் சட்டசபை கூட உள்ள நிலையில், துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதத்தின் போது, நகராட்சி நிர்வாக துறையில் எந்த மாதிரியான அறிவிப்புகளை வெளியிடலாம் என்பது குறித்து கருத்து கேட்கப்பட்டது.

இதில், நிதிச்சுமை அதிகமாக இருப்பதால், தற்போதைக்கு புதிய அறிவிப்புகள் எதையும் வெளியிட வேண்டாம் என முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது. கொள்கை விளக்க குறிப்புகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மூலக்கதை