நகரில் நிலவும் நெரிசலை தவிர்க்க...ஒரு வாரம்!துறையினருடன் ஆலோசிக்க முடிவு

தினமலர்  தினமலர்

பொள்ளாச்சி:''பொள்ளாச்சி நகரில் நெரிசலை குறைக்க ஒரு வார காலத்திற்குள் அனைத்துதுறை அதிகாரிகளுடன் ஆலோசித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என பொள்ளாச்சி சப்-கலெக்டர் தெரிவித்தார்.
பொள்ளாச்சி நகரம் வளர்ந்து வரும் நகரமாக உள்ளது. இங்கு தென்னை சார்ந்த தொழில் உள்ளிட்ட பல்வேறு தொழில்களும் நடைபெற்று வருகின்றன. பல்வேறு பகுதிகளிலிருந்தும் பணிக்காக இந்த பகுதிக்கு வருகின்றனர். பசுமையான பகுதி என பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கிய, பொள்ளாச்சி நகரப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு, தற்போது தீராத தலைவலியாக மாறி வருவது போக்குவரத்து நெரிசல் பிரச்னை தான்.
நகரப் பகுதியில் போக்குவரத்து விதிமுறைகள் மீறப்படும் சம்பவங்களால் நெரிசல் அதிகரித்து வருகிறது. மேலும், நியூஸ்கீம் ரோடு, கடை வீதி, ராஜாமில்ரோடு, சத்திரம் வீதி, மார்க்கெட் ரோடு போன்ற பகுதிகளில் வணிக வளாகங்களுக்கு செல்பவர்கள் வாகனங்களை நிறுத்த 'பார்க்கிங்' வசதியில்லாததால் வாகனங்கள் ரோட்டிலேயே நிறுத்திச்சென்று விடுகின்றனர். வாகனங்களுக்கு பூட்டு போடுதல், கயிறு கட்டி வாகனங்களை ஒழுங்குப்படுத்தி நிறுத்துதல் என பல்வேறு திட்டங்கள் செயல்பாட்டிற்கு கொண்டு வந்த நிலையில், ஒரு சில மாதங்களில் கிடப்பில் போடப்பட்டது.
இதனால், பொள்ளாச்சி நகரில் நெரிசல் பிரச்னைக்கு தீர்வு கிடைக்காத சூழலே உள்ளதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்றவும், நெரிசலை கட்டுப்படுத்த வாகனங்கள் நிறுத்தப்பகுதியை ஒழுங்குப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
ஆலோசனை கூட்டம்
இந்நிலையில், பொள்ளாச்சி நகரில் நெரிசலை கட்டுப்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. சப்-கலெக்டர் காயத்ரி தலைமை வகித்தார். தாசில்தார் செல்வி, டி.எஸ்.பி., கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர். நகராட்சி அதிகாரிகள், டிராபிக் போலீசார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
சுப்பம்மாள் வீதியிலுள்ள நகராட்சிக்கு சொந்தமான சர்க்கஸ் மைதானத்தில், வாகனங்களை நிறுத்தி அதற்கான கட்டணம் நகராட்சியால் வசூல் செய்யலாம். புதிய திட்ட சாலையின் இருபுறமும், 10 அடி அகலத்தில் வாகன நிறுத்துமிடமாக அறிவித்து அதற்கான கட்டணத்தை நகராட்சியால் வசூல் செய்யலாம். கோவை ரோடு, புதிய திட்ட சாலை சந்திப்பு பகுதியிலுள்ள ஆட்டோஸ்டாண்டை கோவை ரோட்டின் மேற்புறத்தில் நிறுத்தலாம்.
உடுமலை ரோடு மற்றும் பல்லடம் ரோடு சந்திப்பிலிருந்து பஸ்ஸ்டாண்ட் செல்வதற்கு மட்டும் ஒருவழிப்பாதையாக மாற்றுவது, சப்-கோர்ட் சுற்றுச்சுவரிலிருந்து சாலையின் பகுதி வரை தடுப்பு வேலி அமைக்கலாம். உடுமலை ரோட்டில் உள்ள பேருந்து நிறுத்தப்பகுதியை மாற்றி அமைக்கலாம். போலீஸ் ஸ்டேஷன் ரோட்டோரத்தில் வாகனங்களை நிறுத்தாத வகையில், 'நோ- பார்க்கிங்' பலகை வைத்து உடுமலை ரோடு, போலீஸ் ஸ்டேஷன் ரோடு சந்திப்பிலிருந்து மாரியம்மன் கோவில் செல்லும் வாகனங்களை ஒருவழிப்பாதையாக மாற்றலாம்.
போலீஸ் ஸ்டேஷன் ரோடு சந்திப்பிலுள்ள ஆட்டோ நிறுத்தத்தினை தெப்பக்குளம் ரோட்டில் மாற்றி அமைக்கலாம். கோவை ரோடு, பாலக்காடு ரோட்டில் நெரிசலை குறைக்க கயிறு கட்டுதல், அகலமான ரோட்டு பகுதிகளில் வாகன நிறுத்துமிடம் வசதி செய்து தருதல், கோவை ரோடு சந்திப்பில், 10 மீட்டருக்கு எந்த வண்டியினையும் நிறுத்தாமலும், நிறுத்துபவர்கள் மீது போக்குவரத்து துறையின் மூலம் நடவடிக்கை எடுக்கலாம்.
மகாலிங்கபுரத்தில் சர்க்கஸ் மைதானம் அருகே ஆம்னி பஸ் நிறுத்தி மக்களை ஏற்றிச் செல்லும் முயற்சி மேற்கொள்ளலாம். ஒருவழிப்பாதையாக ஐயப்பன் கோவில் வழியாக வர தெரிவிக்கலாம். இந்த ரோட்டில் இருபுறமும் கயிறு கட்டுதல், இருபுறம் உள்ள கடைகளை எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நேதாஜி ரோடு ஒருவழிப்பாதை செய்தல், விதியினை மீறி வருபவர்களின் மீது போக்குவரத்து காவல் மூலம் நடவடிக்கை எடுக்கலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர். மேலும், போலீசாரும் தங்களது ஆலோசனைகளை தெரிவித்தனர்.
நெரிசல் பகுதிகளில் ஆய்வுஇதனைத்தொடர்ந்து, சப்-கலெக்டர் தலைமையில், அதிகாரிகள் குழுவினர் நெரிசல் மிகுந்த பகுதிகளை ஆய்வு செய்தனர். கோவை ரோடு, நியூஸ்கீம் ரோடு சந்திப்பு பகுதி, ஆம்னி பஸ் நிறுத்தம் செய்வதற்காக தேர்வு செய்யப்பட்ட சர்க்கஸ் மைதானம் அருகேயுள்ள இடத்தையும் பார்வையிட்டார்.
'நெரிசல் கட்டுப்படுத்தப்படும்'பொள்ளாச்சி சப்-கலெக்டர் காயத்ரி கூறியதாவது: பொள்ளாச்சி நகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நெரிசலை கட்டுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அதிகாரிகளுடன் முதற்கட்டமாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. கோவை ரோட்டில், 'ப்ரீ லெப்ட்' பகுதியில் வாகனங்கள் எளிதாக சென்று வர நடவடிக்கை எடுக்கப்படும். நெரிசலை தவிர்க்க என்ன செய்யலாம் என்பது குறித்து திட்டமிடப்படுகிறது. போலீசார், நகராட்சி உள்ளிட்ட அனைத்துதுறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து, நெரிசலை தவிர்க்க ஒரு வார காலத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும். அதிகாரிகள் கூறும் கருத்துக்கள் கேட்டறியப்பட்டு, அதன்படி புதியதாக திட்டம் போடப்பட்டு அது செயல்பாட்டிற்கு கொண்டு வந்து நெரிசல் கட்டுப்படுத்தப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.


மூலக்கதை