வனத்திலிருந்து வெளியேறும் யானைகள் தண்ணீரை தேடி... மண் மேடான அகழியால் தீராத அச்சம்

தினமலர்  தினமலர்

உடுமலை :தண்ணீர் தேவைக்காக இடம் பெயர்ந்துள்ள யானைகள், விளைநிலங்களில், தொடர்ந்து சேதம் ஏற்படுத்துவதுடன், வனத்திலிருந்து பல கி.மீ., துாரம் தள்ளி முகாமிட்டுள்ளதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். அகழியை பராமரித்து, வனவிலங்குகளுக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்தவும் வனத்துறைக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.
உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில், ஜல்லிபட்டி ஊராட்சிக்குட்பட்ட வெங்கிட்டாபுரம், லிங்கம்மாவூர், கொங்குரார் குட்டை உட்பட கிராமங்கள் உள்ளன. அப்பகுதியில், நுாற்றுக்கணக்கான ஏக்கரில், நீண்ட கால பயிரான தென்னை, மா மற்றும் மானாவாரியாக மொச்சை உட்பட சாகுபடிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்நிலையில், வனப்பகுதியில், நிலவும் வறட்சி காரணமாக, தண்ணீர் தேவைக்காக, ஈசல்திட்டு சுற்று உட்பட பகுதிகளிலிருந்து யானைகள் இடம் பெயர்ந்து விளைநிலங்களுக்கு வருகின்றன.
6 யானைகள் கொண்ட குழு முகாம்
தேக்கல்கரடு என்ற இடத்தில், 6 யானைகள் கொண்ட குழு, முகாமிட்டு இரவு நேரங்களில், சாகுபடிகளை சேதப்படுத்துகின்றன. கடந்த சில நாட்களில் மட்டும், விவசாயி சின்னசாமி என்பவரது தோட்டத்தில், பல டன் மாங்காய்களையும், தீவனத்துக்காக பயிரிடப்பட்டிருந்த சோளப்பயிர்களையும் யானைகள் சேதப்படுத்தியுள்ளன.
மேலும், விவசாயிகள் ரவீந்திரன், சேகர் ஆகியோரது தோட்டத்தில், தென்னை மரங்களின் குருத்துகளை தின்று விட்டு, மரங்களை அடியோடு சாய்த்துள்ளன. அப்பகுதியில், பெரும்பாலான விவசாயிகள், விளைநிலங்களில், வீடு கட்டி வசித்து வருகின்றனர். இரவு நேரங்களில் நாள்தோறும் வரும் யானைகள் கூட்டத்தால், அப்பகுதியினர் அச்சத்தில், இருந்து மீள முடியாமல் உள்ளனர்.
விவசாய சாகுபடிக்காக அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் குழாய்களையும் யானைகள் சேதப்படுத்துவதால், அதிக நஷ்டம் ஏற்பட்டுள்ளதுடன், சாகுபடிக்கு உரிய நேரத்தில், தண்ணீர் பாய்ச்சவும் முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.
உரிய நிவாரணம் வழங்க வேண்டும்
இது குறித்து அப்பகுதி மக்கள் மாவட்ட வன அலுவலர் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர். மனுவில், வனப்பகுதியிலிருந்து வெகுதொலைவிலுள்ள பகுதிக்கும், யானைகள் தண்ணீர் தேவைக்காக வருகின்றன.முன்பு, மலையடிவாரத்திலுள்ள விளைநிலங்களில் மட்டும், யானை மற்றும் காட்டுப்பன்றிகளால், சேதம் ஏற்படும். தற்போது, பல கி.மீ., துாரம் தள்ளியுள்ள கிராமத்துக்கும் வனவிலங்குகள் வரத்துவங்கி விட்டன.
இதனால், மாலை நேரங்களில், குழந்தைகள், பெண்கள் வீடுகளை விட்டு வெளியில் வர அச்சப்படுகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வாகவும், விலங்குகளின் தண்ணீர் தேவை பூர்த்தியாகவும் தேவையான நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொள்ள வேண்டும். யானைகள் தற்போது முகாமிட்டுள்ள பகுதியிலிருந்து அருகிலேயே திருமூர்த்தி அணை அமைந்துள்ளது. அணைப்பகுதிக்கு யானைகள் செல்லும் வகையில், அவற்றை திசை திருப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். நீண்ட கால பயிர்களை சேதமடைந்துள்ளதால், உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்னாச்சு அகழி?வனப்பகுதியிலிருந்து விலங்குகள் வெளியேறி, விளைநிலங்களில் சேதப்படுத்துவதை தவிர்க்க, கடந்த சில ஆண்டுகளுக்கு முன், திருமூர்த்தி அணைப்பகுதியிலிருந்து வெள்ளைப்பாறை உட்பட பகுதிகள் வழியாக, பல கி.மீ., தொலைவுக்கு வனத்துறை சார்பில் அகழி தோண்டப்பட்டது. முறையான பராமரிப்பு இல்லாததால், பல இடங்களில் அகழி மண் மூடி, வனவிலங்குகள் எளிதாக, அவற்றை கடந்து விளைநிலங்களுக்கு வருகின்றன. கோடை காலத்தில், விலங்குகள் இடப்பெயர்ச்சி இயல்பானது என்றாலும், ஒவ்வொரு முறையும் அவற்றின், நடமாடும் பரப்பு விரிவடைந்து, அதிக குடியிருப்புகள் உள்ள கிராமங்கள் வரை நீண்டுள்ளது. இதனால், மனித-வனவிலங்கு மோதல்கள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வாக, அகழியை முறையாக பராமரிப்பதுடன், விலங்குகளுக்கான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், கூடுதல் தண்ணீர் தொட்டிகள் அமைத்தல் உட்பட பணிகளை வனத்துறையினர் மேற்கொள்வது சுற்றுச்சூழலுக்கும், விவசாயிகளுக்கும் நன்மையளிப்பதாக இருக்கும்.

மூலக்கதை