கேள்விகள் ஏராளம்; குளறுபடிகள் தாராளம்!தனி நபர் கழிப்பறை கட்டியதில் ஆட்சேபனை: மாநகராட்சிக்கு தணிக்கைத்துறை 'கிடுக்கிப்பிடி'

தினமலர்  தினமலர்
கேள்விகள் ஏராளம்; குளறுபடிகள் தாராளம்!தனி நபர் கழிப்பறை கட்டியதில் ஆட்சேபனை: மாநகராட்சிக்கு தணிக்கைத்துறை கிடுக்கிப்பிடி

கோவை:கோவை மாநகராட்சி பகுதியில், தனி நபர் இல்லக் கழிப்பறை கட்டிக்கொடுத்ததற்கு, நிதி வழங்கியது தொடர்பாக, தணிக்கைத்துறை ஏராளமான ஆட்சேபனைகளைத் தெரிவித்துள்ளது. இது, பொறியியல் பிரிவினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
வரும், 2019க்குள் திறந்தவெளி கழிப்பிடமே இல்லாத கோவையை உருவாக்க, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. அதற்காக, 'துாய்மை பாரதம்' திட்டத்தில், தனி நபர் இல்லக்கழிப்பறை, பொது அல்லது சமுதாய கழிப்பறைகள் கடடிக் கொடுக்கப்படுகின்றன. கடந்த, 2014ல் கழிப்பறை இல்லாத வீடுகள் கணக்கெடுக்கப்பட்டன.
கோவை மாநகராட்சி பகுதியில், 6,056 வீடுகளில் கழிப்பறை இல்லாதது தெரியவந்தது. அவர்களிடம் விண்ணப்பம் பெற்று, மத்திய - மாநில அரசுகள் மற்றும் மாநகராட்சி நிதி, பெருநிறுவனங்களிடம் சமுதாய பொறுப்பு நிதி வசூலித்து, கழிப்பறை கட்டிக் கொடுக்கப்படுகிறது.
போலி 'பில்'கள்!
காலியிடம் உள்ள வீடுகளில் தனி நபர் கழிப்பறை, இடம் இல்லாத இடங்களில் சமுதாய கழிப்பறை, பொதுமக்கள் அதிகமாக வந்து செல்லும் பகுதியில் பொதுக்கழிப்பறை கட்டிக்கொடுக்கப்படுகின்றன.மத்திய அரசு ரூ.4,000, மாநில அரசு ரூ.2,000, மாநகராட்சி ரூ.2,000, சமுதாய பொறுப்பு திட்டத்தில் பெருநிறுவனங்கள் பங்களிப்பாக ரூ.10,000 சேர்த்து, ரூ.18,000 மதிப்பீட்டில், தனி நபர் இல்லக்கழிப்பறைகள் கட்டப்படுகின்றன. இதுவரை, 3,200 கழிப்பறைகள் கட்டப்பட்டு உள்ளன. இன்னும், 2,856 கழிப்பறை கட்ட வேண்டும்.
ஆனால், சில கழிப்பறைகளுக்கு ரூ.6,000, சில கழிப்பறைகளுக்கு ரூ.12,000, சில கழிப்பறைகளுக்கு, ரூ.18,000 என, மூன்று விதங்களில், மாநகராட்சிக்கு 'பில்' சமர்ப்பிக்கப்பட்டு, ரூ.5 கோடி வரை, பெறப்பட்டு உள்ளது. இப்'பில்'களை ஆய்வு செய்த, தணிக்கைத்துறை அதிகாரிகளுக்கு ஏராளமான சந்தேகங்கள் எழுந்துள்ளன. கட்டப்பட்ட, 3,200 கழிப்பறைகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்டவைக்கு, போலி 'பில்' சமர்ப்பித்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அடுக்கடுக்காய் கேள்வி...
அதனால், தனி நபர் இல்லக்கழிப்பறை கட்டுவதற்கு மத்திய அரசு வழங்கிய நிதி எவ்வளவு... மாநில அரசு வழங்கிய நிதி எவ்வளவு... மாநகராட்சி ஒதுக்கிய நிதி எவ்வளவு... பெருநிறுவனங்களிடம் சமுதாய பொறுப்பு திட்டத்தில் பெற்ற தொகை எவ்வளவு? என்ற விபரத்தை தணிக்கைத்துறை கேட்டுள்ளது.
மேலும், கழிப்பறைக்கான தொகை ஒரே மாதிரியாகத் தானே இருக்க வேண்டும். ரூ.6,000, ரூ.12,000, ரூ.18,000 என, ஏன் மூன்று விதமாக 'பில்' சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன. இதற்கான காரணம் என்ன? மத்திய, மாநில அரசுகள் வழங்கும் மானியத்தை, பயனாளிகளின் வங்கி கணக்கில் தானே வரவு வைக்க வேண்டும். ஏன், அவ்வளவு தொகையும் தனிப்பட்ட நிறுவனத்தின் கணக்கில் செலுத்தப்பட்டது.
துறை ரீதியாக பணி உத்தரவு வழங்கப்பட வேண்டும்; பணியை முடித்ததும், பயனாளி புகைப்படத்துடன் சேர்த்து, 'பில்' சமர்ப்பிக்க வேண்டும்; அதில், துறை தலைவர் கையெழுத்திட்டிருக்க வேண்டும். இத்தகைய நடைமுறை பின்பற்றாமல், எதன் அடிப்படையில் பணம் வழங்கப்பட்டது எனவும், தணிக்கைத்துறை கேள்வி எழுப்பியுள்ளது.
தனி நபர் இல்லக்கழிப்பறை கட்டியது தொடர்பாக, ஏராளமான ஆட்சேபனைகளை தெரிவித்து, தணிக்கைத்துறை அறிக்கை கொடுத்துள்ளது. இதற்கு விளக்கம் கேட்டு, பொறியியல் பிரிவினருக்கு அந்த அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, பொறியியல் பிரிவினர் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
இதுதொடர்பாக விசாரித்தபோது, சமுதாய பொறுப்பு திட்டத்தில், சில நிறுவனங்கள் நிதி வழங்காமல், தங்களது செலவிலேயே கழிப்பறைகள் கட்டிக் கொடுத்துள்ளன. அப்பயனாளிகள் பெயரில், அரசு மானிய உதவியை பெற, 'பில்' சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாகவே, பயனாளிகளின் புகைப்படங்களை, 'பில்'லில் இணைக்காதது தெரியவந்தது.
தணிக்கைத்துறை கேள்விகளை அடிப்படையாகக் கொண்டு, தனி நபர் இல்லக்கழிப்பறைகள் கட்டப்பட்டு இருக்கின்றனவா, இல்லையா என மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தினால், பூதாகரமான தகவல்கள் வெளிச்சத்துக்கு வரும். இவ்விஷயத்தில் எத்தனை அதிகாரிகள் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள், யாருடைய நிர்பந்தத்தில் பணம் வழங்கப்பட்டது, என்பது தெரியவரும்.தனியார் நிறுவனம் கட்டிக்கொடுத்த கழிப்பறைகளுக்கு, மத்திய - மாநில அரசுகள் வழங்கும் மானியம் பெற வாய்ப்பு இருக்கிறதா? அந்த மானியம் யாரை சென்றடைய வேண்டும் என்பன போன்ற கேள்விகளும் எழுகின்றன. ஏனெனில், இத்திட்டத்தில், கடந்த ஆண்டில் மட்டும், 5 கோடி ரூபாய் வரை வழங்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாகவே, ஏராளமான வினாக்கள் எழ ஆரம்பித்துள்ளன.
முறைகேடு இல்லையாம்!
மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, 'இலக்கை எட்ட வேண்டும் என்ற நோக்கத்துக்காக, விரைந்து பணியாற்றினோம். தேவைப்படும் வீடுகளில் கழிப்பறைகள் கட்டிக்கொடுக்கப்பட்டன. முறைகேடு நடந்திருக்க வாய்ப்பில்லை. சந்தேகங்களை ஆட்சேபனையாக தணிக்கைத்துறை தெரிவிப்பது வழக்கம். அதற்கு துறை ரீதியாக பதில் அளிக்கப்படும். சந்தேககங்ளை நிவர்த்தி செய்யும் வகையில் பதில் இல்லாவிட்டாலோ அல்லது, முறைகேடு நடந்திருப்பதாக, தணிக்கைத் துறை தரப்பில் உறுதியாக கூறினாலோ, 'பில்' தொகையை யார் பெற்றிருந்தார்களோ, அவர்களிடம் இருந்து திரும்ப வசூலிக்கப்படும்' என்றனர்.
கையெழுத்திட மறுப்பு
சில வார்டுகளில், அதிகாரிகளின் நிர்பந்தத்துக்கு பணிந்து, 'ஒர்க் ஆர்டர்' வாங்காமலேயே, பல லட்சம் ரூபாய் செலவழித்து, கழிப்பறைகளை ஒப்பந்ததாரர்கள் கட்டிக் கொடுத்துள்ளனர். இவர்கள், இப்போது பணம் வாங்க முடியாமல் அல்லாடுகின்றனர். தற்போதைய தேதி குறிப்பிட்டு, 'ஒர்க் ஆர்டர்' வழங்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் வேலையே நடக்காத பட்சத்தில், எப்படி கையெழுத்திட முடியும் என, பொறியியல் பிரிவினர் நழுவுகின்றனர்.

மூலக்கதை