பச்சை 'சிக்னல்'... தீருமா சிக்கல்!நஞ்சுண்டாபுரத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்ட... ண உத்தரவை ஒரு மாதமாகியும் அறிந்திராத மாநகராட்சி!

தினமலர்  தினமலர்
பச்சை சிக்னல்... தீருமா சிக்கல்!நஞ்சுண்டாபுரத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்ட... ண உத்தரவை ஒரு மாதமாகியும் அறிந்திராத மாநகராட்சி!

சுற்றுப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கண்காணிப்புடன், கோவை நஞ்சுண்டாபுரத்தில் கழிவுநீர் சுத்திகரிக்கும் நிலையம் கட்டுவதற்கு, சென்னை பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி வழங்கியுள்ளது.
தற்போதுள்ள கோவை மாநகராட்சி, கடந்த, 2011ல் விரிவாக்கம் செய்யப்பட்டது; அதற்கு முன்பாக, 72 வார்டுகளைக் கொண்ட நகரமாக இருந்தபோது, ஜவஹர்லால் நேரு தேசிய நகரப் புனரமைப்புத் திட்டத்தின் கீழ், 377 கோடி ரூபாய் மதிப்பில், பாதாள சாக்கடைத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான பணிகள் துவங்கின. நகராட்சியாக இருந்தபோது, அமைக்கப்பட்ட சில பகுதிகளைத் தவிர்த்து, பிற பகுதிகளில் இத்திட்டம் செயல்படுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது.
மூன்றில் இரண்டு தயார்!
இத்திட்டத்தின்படி, கோவையில் பாதாள சாக்கடை மற்றும் பிற கால்வாய்களில் வெளியேறும் கழிவுநீரைச் சுத்திகரிக்க, உக்கடம், ஒண்டிப்புதுார் மற்றும் நஞ்சுண்டாபுரம் ஆகிய மூன்று இடங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க மாநகராட்சி முடிவு செய்தது. இதில், உக்கடத்தில் நாளொன்றுக்கு, ஏழு கோடி லிட்டர் கழிவு நீர் சுத்திகரிக்கப்படுகிறது. ஒண்டிப்புதுாரில், ஆறு கோடி லிட்டர் சுத்திகரிக்கும் திறனுள்ள நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.
ஆனால், நஞ்சுண்டாபுரத்தில் கடந்த 2008ல், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி துவங்கியவுடன், அப்பகுதியிலுள்ள குடியிருப்புவாசிகள் தரப்பில் எதிர்ப்புக் கிளம்பியது; மொத்தம், 32.22 கோடி ரூபாய் மதிப்பில், நான்கு கோடி லிட்டர் கழிவுநீரைச் சுத்திகரிக்கும் நோக்குடன் பணிகள் துவங்கின; இதற்கு உள்ளூர் திட்டக்குழுமம் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியை மாநகராட்சி நிர்வாகம் பெறவில்லை.
இதைக் காரணமாக வைத்தே, இந்தக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு எதிராக, அப்பகுதி மக்கள் சார்பில் தடையுத்தரவு பெறப்பட்டது. சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட இந்த வழக்கு, சுற்றுச்சூழல் சம்மந்தப்பட்டது என்பதால், பசுமைத் தீர்ப்பாயத்துக்கு மாற்றப்பட்டது. அப்போதிலிருந்து இந்த வழக்கு, ஒன்பது ஆண்டுகளாக நடந்து வருவதால், நஞ்சுண்டாபுரத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி, தடைபட்டு நிற்கிறது.
கிடைத்தது அனுமதி!
பல கோடி ரூபாய் மதிப்பில், இங்கு அமைக்கப்பட்ட கட்டடம் மற்றும் உபகரணங்கள், வீணாகி வருகின்றன. மாநகராட்சி அதிகாரிகள், தொடர் முயற்சி எடுத்திருந்தால், எப்போதோ வழக்கு முடிவடைந்து, இந்த சுத்திகரிப்பு நிலையம், இப்போது இயங்கத் துவங்கியிருக்கும்; மாநகரில், பாதாள சாக்கடைத் திட்டமும் ஓரளவு செயல்பாட்டுக்கு வந்திருக்கும். ஆனால், வழக்கை விரைந்து முடிக்கவோ, பணிகளைத் தொடரவோ மாநகராட்சி நிர்வாகம் தொடர் முயற்சி எடுக்கவில்லை.
இவ்வழக்கில், மாநகராட்சி தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், 'சுத்திகரிப்பு மையம் அமைந்தால், 13 வார்டுகளில் வெளியேற்றப்படும் கழிவு நீரை சுத்திகரிக்கலாம். சுற்றுச்சூழலுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது; சுத்திகரித்த கழிவு நீரில் துர்நாற்றம் வீசாது; நொய்யல் ஆற்றில் கலக்கத் திட்டமிட்டுள்ளதால், நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்புள்ளது. விவசாயம், தோட்ட பராமரிப்பு; தொழில் நிறுவனப் பயன்பாட்டுக்கும் பயன்படுத்தலாம்' என, உறுதி கொடுக்கப்பட்டது.
இரு தரப்பிலும் விசாரித்த சென்னை பசுமைத் தீர்ப்பாயம், கடந்த ஏப்., 24ல் முக்கிய உத்தரவை வழங்கியது; அப்பகுதி மக்களின் கண்காணிப்புடன், கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் கட்டலாம் என்று அனுமதித்து உத்தரவிட்டுள்ளது.
துர்நாற்றம் வீசாத வகையிலும், காற்று மற்றும் ஒலி மாசு ஏற்படாமலும் சுத்திகரிப்புப் பணி மேற்கொள்ள வேண்டும். குடியிருப்புவாசிகள் சொல்லும் புகார்களுக்கு, மாநகராட்சி உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.பசுமைத் தீர்ப்பாய உத்தரவால், நஞ்சுண்டாபுரம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி, மீண்டும் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையம் அமைக்கப்பட்டால் மட்டுமே, பழைய மாநகராட்சிப் பகுதியில் நடந்து வரும் பாதாள சாக்கடைத் திட்டத்தை முழுமையாக முடிக்க முடியும்; அதன் பின்பே, விரிவாக்கப்பகுதிகளுக்கு, பாதாள சாக்கடைத் திட்டம் தீட்ட முடியும்; ஆனால், இனியாவது சிக்கல் தீருமா, மீண்டும் தடை வருமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
நல்லா வருவீங்க ஆபீசர்!
பாதாள சாக்கடைத் திட்டம், பல ஆண்டுகளாக முடிவடையாமல் இழுப்பதற்கு, மாநகராட்சிப் பொறியாளர்களின் திறமையின்மை மற்றும் பொறுப்பின்மையே காரணமாகும். இதற்கான தடையை நீக்கி, பணியைத்தொடர பிற அலுவலர்களும் பெரிதாக அக்கறை காட்டவில்லை; இனியாவது, இந்தப் பணிகளை வேகப்படுத்துவார்களா என்பது சந்தேகமே. ஏனெனில், கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் தொடர்பான உத்தரவு, ஏப்., 24ல் வெளியாகியும் நேற்று வரை மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரியவில்லை.
இதுதொடர்பாக விசாரித்தபோது, 'இரு தரப்பு விவாதமும் முடிந்து விட்டது; தீர்ப்பு இன்னும் சொல்லவில்லை' என்றே பதில் கூறினர். பசுமைத் தீர்ப்பாய உத்தரவு நகலை காட்டியதும் அதிர்ச்சிக்குள்ளான அவர்கள், மாநகராட்சி சார்பில் வாதாடும் வக்கீல்களிடம் விவரம் கேட்டனர். அப்போதுதான், மாநகராட்சிக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்த விவரம் தெரியவந்தது.

மூலக்கதை