ஆரணி ஆற்றில் மணல் கொள்ளையை தடுக்காத கனிம வளத்துறை அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் போராட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆரணி ஆற்றில் மணல் கொள்ளையை தடுக்காத கனிம வளத்துறை அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் போராட்டம்

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே மெய்யூர், இறையூர், விளாப்பாக்கம், செம்பேடு, தாமரைப்பாக்கம், பாகல்மேடு, குருவாயல் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள கொசஸ்தலை ஆற்றிலும், மாளந்தூர், கல்பட்டு, செங்காத்தாகுளம், ஏனம்பாக்கம், மேல்மாளிகைப்பட்டு உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள ஆரணி ஆற்றிலும் இரவு நேரத்தில் மணல் கொள்ளை நடக்கிறது. ஏரிக்குப்பம் வனப்பகுதியில் கிராவல் மண் கொள்ளை நடந்து வருகிறது.

திருக்கண்டலம் கிராமத்தில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ரூ. 33 கோடி செலவில்  கட்டப்பட்டுள்ள தடுப்பணை உடைந்துவிட்டது. வெள்ளியூர், மேல் செம்பேடு தடுப்பணைகள் உடைந்துவிட்டது.

இதனால் ஆறுகளில் நிலத்தடி நீர் குறைந்தும், அணைகளில் தண்ணீர்  தேங்காமலும்  இருப்பதால் விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். இவற்றை சரிப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் காவல்துறை, வருவாய்துறை, பொதுப்பணித்துறை, கனிம வளத்துறை அதிகாரிகளை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள்  சங்கம், கொசஸ்தலை ஆறு பாதுகாப்புக்குழு சார்பில் தாமரைப்பாக்கம் கூட்டுசாலையில் ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடந்தது. விவசாய சங்க மாவட்ட தலைவர் ஜி. சம்பத் தலைமை தாங்கினார்.

வியாபாரிகள் சங்க தலைவர் கணேசன், வெங்கடேசன், டி. பாஸ்கர், ரமாகண்ணன் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக விவசாய சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம், மாவட்ட செயலாளர்கள் தயாநிதி, துளசி நாராயணன், நிலத்தடி நீர் பாதுகாப்புக்குழு தலைவர் பாலாஜி, மாவட்ட துணைத்தலைவர் ரவி, பழனி ஆகியோர் கண்டன உரையாற்றினர். போராட்டத்தில் காவல்துறை, பொதுப் பணித்துறை, கனிம வளத்துறை அதிகாரிகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

அரசன் நன்றி கூறினார்.


.

மூலக்கதை