மத்திய அரசின் 3ம் ஆண்டு நிறைவுவிழா : நாட்டின் மிக நீளமான பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

தமிழ் முரசு  தமிழ் முரசு
மத்திய அரசின் 3ம் ஆண்டு நிறைவுவிழா : நாட்டின் மிக நீளமான பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

கவுகாத்தி: மத்தியில் பாஜ ஆட்சிக்கு வந்து 3 ஆண்டு நிறைவு விழா அசாமில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. விழாவில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி,  இந்தியாவின் மிக நீளமான பாலத்தை  திறந்து வைத்தார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜ பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு 2014 மே 26ல் பதவி ஏற்றது.

நேற்றுடன் 3ம் ஆண்டு நிறைவடைந்து. இதை சிறப்பாக கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் ஜூன் 15 வரை தொடர்ந்து விழா நடத்த பாஜ திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய அரசின் 3ம் ஆண்டு நிறைவு விழா அசாமில் பிரமாண்டமாக நடக்கிறது.

மேலும், அசாமில் 15 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி பாஜ ஆட்சியை கைப்பற்றிய நிலையில், இதன் முதலாம் ஆண்டு நிறைவு விழாவும் கொண்டாடப்படுகிறது.

வெகு விமரிசையாக நடைபெறும் இவ்விழாவில் பாஜ ஆளும் மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். கவுகாத்தியில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.    இதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அசாம் மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். பிரம்மபுத்ரா ஆற்றின் குறுக்கே தோலா - சடியா கட்டப்பட்ட நாட்டிலேயே மிகவும் நீளமான பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.



இந்தியாவின் நீளமான பாலமான இது பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டது. அசாம்-அருணாச்சல பிரதேசத்தை இணைக்கும் வகையில் கட்டப்பட்ட இந்த பாலம் 9. 15 கிமீ நீளம் உடையது.

இதன்மூலம் இருமாநில போக்குவரத்து 4 மணி நேரமாக குறையும். ரூ. 950 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த பாலம் மக்கள் பயன்பாட்டுக்கு மட்டுமின்றி, ராணுவத்தினருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

ராணுவ தளவாடங்களை இப்பாலத்தின் வழியாக எளிதாக கொண்டு செல்ல முடியும். 2011ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பாலத்தின் கட்டுமான பணி 6 ஆண்டுகளுக்குபின் நிறைவு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


.

மூலக்கதை