சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா தக்க வைக்கும் : கேப்டன் கோஹ்லி நம்பிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா தக்க வைக்கும் : கேப்டன் கோஹ்லி நம்பிக்கை

லண்டன்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் ஜுன் 1ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இது குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி அளித்த பேட்டி: அணியில் உள்ள வீரர்கள் இம்முறை நல்ல உடல் தகுதியுடன் உள்ளனர்.

அத்துடன் வீரர்களிடம் நல்ல முதிர்ச்சியும் காணப்படுகிறது. இதனால் சாம்பியன்ஸ் டிராபியை தக்க வைத்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கை உள்ளது (2013 சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய இந்தியா, நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் நடப்பு தொடரில் களமிறங்குகிறது).

கடந்த 3-4 ஆண்டுகளில் நிறைய அனுபவம் பெற்றுள்ளோம். உலக கோப்பை என்றால் நிறைய போட்டிகளில் விளையாடலாம்.



ஆனால் சாம்பியன்ஸ் டிராபியில் குரூப் போட்டிகளுக்கு (லீக்) பிறகு அரையிறுதி அல்லது வெளியேற்றத்தை சந்திக்க வேண்டியதிருக்கும். இப்படி சவால் நிறைந்ததாக இருப்பதால் சாம்பியன்ஸ் டிராபி தொடரை நான் மிகவும் விரும்புகிறேன்.

மத்திய வரிசை, பின் வரிசை பேட்ஸ்மேன்களின் பங்களிப்பை வலுப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. இந்த வகையில் கடந்த சில ஆண்டுகளாக டோனி அதிக சுமையை சுமந்து வந்தார்.



டோனியுடன் இணைந்து போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்ய போதிய வீரர்கள் இல்லாததால், தனது முழு திறமையை டோனியால் வெளிப்படுத்த முடியாத நிலை இருந்தது. ஆனால் தற்போது கேதர் ஜாதவும், ஹர்திக் பாண்டியாவும் டோனியின் வேலையை எளிதாக்கி வருகின்றனர்.

அவர்கள் தொடர்ந்து அதனை சிறப்பாக செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இனி எப்படி செயல்பட போகிறோம் என்பதில்தான் அனைத்தும் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில், வரும் ஜூன் 4ம் தேதி பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.


.

மூலக்கதை