பயிற்சியாளராக கும்ளேவுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா?

தமிழ் முரசு  தமிழ் முரசு
பயிற்சியாளராக கும்ளேவுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா?

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இதன்மூலம், சாம்பியன்ஸ் டிராபி போட்டியுடன் அனில் கும்ளேவின் பதவிக் காலம் முடிவுக்கு வரும் நிலையில், அவருக்கு பதவி நீடிப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வரும் 31ம் தேதி வரையில் விண்ணப்பங்களை அனுப்பிவைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்களில் தகுதியானவர்களிடம் சச்சின் டெண்டுல்கர், கங்குலி, விவிஎஸ்.

லட்சுமணன் ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனைக் குழு நேர்க்காணல் நடத்தும்.

இதுதொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், “நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் பயிற்சியாளர் தேர்வு நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், அதன் ஒட்டுமொத்த நடைமுறைகளையும் பிசிசிஐ நிர்வாகக் குழு (சிஓஏ) கண்காணிக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கும்ளே மீதான அதிருப்தியின் காரணமாகவே அவருக்கு பிசிசிஐ பதவி நீட்டிப்பு வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. வீரர்களுக்கான ஒப்பந்த ஊதியம் மற்றும் தனது ஊதியத்தை அதிகளவு உயர்த்தித் தருமாறு அனில் கும்ளே கேட்டுவருவதால் அவர் மீது பிசிசிஐக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

கும்ளே பயிற்சியின் கீழ் சிறப்பாகச் செயல்பட்ட இந்திய அணி, இந்த சீசனில் உள்நாட்டில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 13 ஆட்டங்களில் 10 வெற்றி, ஒரு தோல்வியை பதிவு செய்துள்ளது. 2 ஆட்டங்கள் டிரா ஆகின.

இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், “ கும்ளே தனக்காகவும், அணியின் வீரர்களுக்காகவும் பேரம் பேசி வருகிறார்.

இது ஏற்புடையது என்றாலும், நாளை அவருக்குப் பதில் வேறு ஒருவரை நியமிக்க பிசிசிஐ முடிவு செய்யும் பட்சத்தில், அவர் பேரம் பேசும் நிலையில் இருக்க மாட்டார். அவரது சில கோரிக்கைகள் விவரிக்க இயலாத வகையில் இருக்கின்றன’ என்றார்.

இதனால் கும்ளேவுக்கு பதவி நீட்டிப்பு கிடைக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.

இதனிடையே விராட் கோஹ்லி அளித்துள்ள பேட்டியில், பயிற்சியாளர் தேர்வில் கடந்த காலங்களைப் போலவே தற்போதும் நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது.

நான் அறிந்த வரையில் பிசிசிஐ விதிகளின்படி நடக்கிறது. முந்தைய தேர்வுகளுடன் ஒப்பிடுகையில் எந்தவொரு வித்தியாசமான நடைமுறையும் தலைமை பயிற்சியாளர் தேர்வில் தற்போது பின்பற்றப்படுவதாகத் தெரியவில்லை.

இதுதொடர்பாக எனக்கு அதிக தகவல்கள் தெரியவில்லை. ஏனெனில், அதில் முடிவுகள் மேற்கொள்ள அதற்கென தனியே குழு உள்ளது.

அவர்கள் விதிகளின்படி நடக்கிறார்கள். அணியின் சிறப்பான செயல்பாட்டைப் பொறுத்த வரையில், அது அணியில் உள்ள ஒவ்வொருவரின் பங்களிப்பின் மூலம் கிடைப்பதாகும்’ என்றார்.

.

மூலக்கதை