ஜிஎஸ்டி மசோதாவுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஜிஎஸ்டி மசோதாவுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்

சென்னை: தமிழக அமைச்சரவையில் ஜிஎஸ்டி மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. வரும் சட்டசபை கூட்ட தொடரில் இந்த மசோதாவை தாக்கல் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.   நாடு முழுவதும் ஜிஎஸ்டி மசோதா வரிவிதிப்பு முறை வரும் ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இவற்றில் வரி விதிப்பு முறை 4 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி 0,5,12, 18, சதவீதம் என நான்கு அடுக்காக வரி விதிப்பு பிரிக்கப்பட்டுள்ளது.

இதில், கல்வி,மருத்துவம் சார்ந்த சேவைகளுக்கு மட்டும் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஓட்டல், சினிமா டிக்கெட், கார் உள்ளிட்டவைகளுக்கு அதிகளவில் வரிவிதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.



இந்த ஜிஎஸ்டி மசோதாவால் பொதுமக்களுக்கு பாதிப்பை தான் ஏற்படுத்தும் என்றும், வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று தமிழகத்தில் வணிகர்கள் இந்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ஓட்டல்களுக்கு 18 சதவீதம் வரிவிதிக்கப்பட்டுள்ளதால் இதற்கு எதிர்ப்பு வரும் 30ம் தேதி ஒரு நாள் முழு கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இந்த மசோதாவிற்கு பெரும்பாலான மாநிலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளது. அந்தந்த மாநில சட்டசபையில் இந்த மசோதா தாக்கல் செய்து ஒப்புதல் பெறப்பட்டு விட்டது.

இந்த நிலையில், இந்த மசோதாவிற்கு ஆரம்பம் முதல், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இந்த மசோதாவால் மாநிலங்களின் வருவாய் பாதிக்கும், அத்தியாவசிய பொருட்களின் விலை  உயரும் என்று கூறி தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தார்.



ஆனால், தற்போது ஜிஎஸ்டி மசோதாவிற்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு ஒப்புதல் அளிக்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்தில் ஜிஎஸ்டி மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் சட்டசபை கூட்ட தொடரில் இந்த மசோதாவை தாக்கல் செய்து, அவற்றை நிறைவேற்றவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


மேலும், இக்கூட்டத்தில் வழிகாட்டி மதிப்பீடு குறைப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.

வழிகாட்டி மதிப்பீடு குளறுபடியால் பத்திர பதிவு குறைந்துள்ளதால், அவற்றை அதிகரிக்கும் வகையில் அதன் மதிப்பை குறைக்கவும் அமைச்சரவையில் முடிவு செய்துள்ளது.

வழிகாட்டி மதிப்பீடு குறைப்பது தொடர்பான அறிவிப்பை வரும் சட்டசபை கூட்ட தொடரில் வெளியிடவும் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

.

மூலக்கதை