சிறிலங்காவில் தொடரும் நெருக்கடி! மீட்பு பணியில் ஈடுபட்ட உலங்கு வானூர்தி விபத்து

PARIS TAMIL  PARIS TAMIL
சிறிலங்காவில் தொடரும் நெருக்கடி! மீட்பு பணியில் ஈடுபட்ட உலங்கு வானூர்தி விபத்து

இலங்கையில்  சீரற்ற காலநிலையினால் தென்பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
 
பெய்து வரும் அடைமழை காரணமாக இதுவரை 18 பேர் உயிரிழந்ததுடன், பலர் காணாமல் போயுள்ள நிலையில் பல்லாயிரக்கணக்கானனோர் இடம்பெயர்ந்துள்ளனர்.
 
இந்நிலையில் சம்பவத்தில் காணாமல் போனவர்களை தேடும் பணியில் முப்படையினர்  ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
 
அதற்கமைய புலத்சிங்கள, போகஹவத்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்த 9 பேரின் சடலம் இதுவரையில் பிம்புர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் ஜீ.டீ.ஆர்.ருத்ரிகு தெரிவித்துள்ளார்.
 
அந்த பகுதியில் மேலும் பல இடங்களில் மண் சரவு ஏற்படும் ஆபத்துக்கள் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
 
பத்து கிராமங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் அவர்களுக்கு தேவையான உணவு வகைகளை வழங்க விமானப் படையினரின் உதவியை நாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
 
இதேவேளை, சப்புகஸ்கந்த - ஹெய்யங்கந்தை பகுதியிலுள்ள வீடொன்றின் மீது மண் சரிந்து வீழ்ந்ததில் இரண்டு பெண்கள் பலியாகியுள்ளனர்.
 
குறித்த இடத்தில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அத்துடன் அகலவத்தை, மாவத்தவத்த பகுதியில் மூன்று வீடுகளில் ஏற்பட்ட மண் சரிவில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
கர்ப்பிணி தாயார், சிறு பிள்ளை அதற்குள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த மூன்று வீடுகளை சேர்ந்த 12 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
இதேவேளை, கஹாவத்தை பிரதேசத்தில் பெய்த அதிக மழை காரணமாக மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
53 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
அத்துடன் அவிசாவளை, வெலன்கல்ல பிரதேச வீடு ஒன்றின் மீது மண் மேடு சரிந்து விழுந்ததில் பாடசாலை மாணவர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
16 மற்றும் 10 வயதுடைய இரண்டு மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
 
 
 
 
 
 
 

மூலக்கதை