கருணாநிதியால் முரட்டு பக்தன் என அழைக்கப்பட்டவர் தூத்துக்குடி திமுக மா.செ. என்.பெரியசாமி மரணம்: மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
கருணாநிதியால் முரட்டு பக்தன் என அழைக்கப்பட்டவர் தூத்துக்குடி திமுக மா.செ. என்.பெரியசாமி மரணம்: மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியால் முரட்டு பக்தன் என அழைக்கப்பட்ட, தூத்துக்குடி திமுக மாவட்டச் செயலாளர் என். பெரியசாமி சென்னையில் இன்று காலை திடீரென காலமானார். அவரது உடலுக்கு திமுக செயல் தலைவர் மு. க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளர் என். பெரியசாமி(78). இவர் கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார்.

நுரையீரல் பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரது உறவினர்கள் கடந்த 15 நாட்களுக்கு முன் என். பெரியசாமியை சென்னை அழைத்து வந்து இங்கு கீழ்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை 7. 30 மணி அளவில் என். பெரியசாமி மரணம் அடைந்தார். தூத்துக்குடி தட்டார் மடத்தை சேர்ந்த என். பெரியசாமி, திமுக மீதும், கருணாநிதி மீதும் உள்ள ஈர்ப்பால் 1960ம் ஆண்டில் கட்சியில் சேர்ந்தார்.

குறிப்பாக கருணாநிதி மீது அதிக பற்றுக்கொண்டவர். கடந்த ஆண்டு கலைஞர் விருது என். பெரியசாமிக்கு வழங்கப்பட்டது.



முதன் முதலாக 1979ம் ஆண்டில் திமுக வட்டப் பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்டார். பின்னர், 1986 முதல் தொடர்ந்து 31 ஆண்டுகளாக திமுக மாவட்ட செயலாளராக இருந்தார்.

கட்சி ரீதியாக மாவட்டம் பிரிக்கப்பட்டதால், தற்போது என். பெரியசாமி தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளராக இருந்தார். 1976ம் ஆண்டு நெருக்கடி நிலையின் போது மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கடந்த 1986ம் ஆண்டு தூத்துக்குடி நகர்மன்ற தலைவர் தேர்தலில் திமுக சார்பில் பெரியசாமி களம் இறக்கப்பட்டார். முதன் முதலாக தேர்தல் களத்தில் இறங்கிய என்.

பெரியசாமி வெற்றி பெற்று நகர்மன்றதலைவரானார். 1989 மற்றும் 1991ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இவர் மூன்று முறை எம்எல்ஏவாக இருந்துள்ளார். கட்சி மீதும், கட்சி தலைமை மீதும் பெரியசாமிக்கு இருந்த நீங்கா பற்றைக் கண்டு கருணாநிதியே மெய்சிலிர்த்துள்ளார்.

அதனால் தன்னுடைய முரட்டு பக்தன் என என். பெரியசாமியை கருணாநிதி அழைத்தார்.

என். பெரியசாமியின் மறைவை கேட்டு திமுக செயல் தலைவர் மு. க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர்.

மறைந்த என். பெரியசாமிக்கு மனைவி, 3 மகன்கள் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். இவரது மகளும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் தற்போது தூத்துக்குடி தொகுதி எம்எல்ஏவாக உள்ளார்.

பெரியசாமியின் உடல் சென்னையிலிருந்து இன்றிரவு தூத்துக்குடிக்கு கொண்டு வரப்பட்டு பூபாலராயர்புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. நாளை மறுநாள் (ஞாயிறு) அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தூத்துக்குடியில் அடக்கம் செய்யப்படுகிறது.

முன்னதாக, இன்று காலை கீழ்பாக்கம் மருத்துவமனையில் இருந்து எம்பாமிங் செய்வதற்காக என். பெரியசாமியின் உடல் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு, வைக்கப்பட்டிருந்த பெரியசாமியின் உடலுக்கு திமுக செயல் தலைவரும், தமிழக எதிர்கட்சித் தலைவருமான மு. க. ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

நாளை மறுநாள் தூத்துக்குடியில் நடக்கும் இறுதி அஞ்சலியிலும் மு. க. ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

சென்னையில் உள்ள திமுக முக்கிய பிரமுகர்கள் அனைவரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் நேரில் சென்று என். பெரியசாமிக்கு அஞ்சலி செலுத்தினார்.

3 நாள் துக்கம் அனுசரிப்பு: என். பெரியசாமி மறைவுக்கு திமுக இரங்கல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக திமுக தலைமைக்கழகம் இன்று வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘‘தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான என். பெரியசாமி இன்று காலை சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார்.

அவரது மறைவையொட்டி இன்று முதல் மூன்று நாட்கள் கழக அமைப்புகள் அனைத்தும் கட்சி கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்க விடுமாறும், கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒத்தி வைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’’ என கூறப்பட்டுள்ளது.

மு. க. ஸ்டாலின் இரங்கல்
திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு. க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: “என்னுடைய முரட்டுப் பக்தன்” என்று கருணாநிதியால் பாசத்துடன் அழைக்கப்பட்ட தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் பெரியசாமியின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். கட்சியின் போர்க்குணமிக்க மாவட்டக் கழக செயலாளராக திகழ்ந்த அவரது மறைவிற்கு கருணாநிதி சார்பிலும், என் சார்பிலும், திமுக சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும், சொந்தங்களுக்கும், கட்சி தொண்டர்களுக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.

கருணாநிதி மீது தன் உயிரையும், என் மீது தனிப்பட்ட பாசத்தையும் வைத்திருந்தவர் என்பதை நினைக்கும் போது, பெருமை மிக்க தொண்டரை இழந்த சோகம் எங்களை உலுக்கிக் கொண்டிருக்கிறது.

30 வருடங்கள் திமுக மாவட்டச் செயலாளராக விளங்கிய பெரியசாமி கட்சிக்காகவும், மக்களுக்காகவும் வாழ்நாள் எல்லாம் பாடுபட்ட அவருக்கு “கலைஞர் விருது” வழங்கி சிறப்பிக்கப்பட்டார்.

வாழ்க்கை குறிப்பு
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தாலுகா தட்டார்மடத்தில் நாராயணன் நாடார்-மாலையம்மாள் தம்பதியரின் மகனாக 15. 06. 1942ம் ஆண்டு பிறந்தவர் என். பெரியசாமி.

சொந்த ஊரில் இருந்து வேலைவாய்ப்பிற்காக தூத்துக்குடிக்கு வந்த பெரியசாமி தொழிலாளியாக தன் வாழ்வை தொடங்கினார். அப்போதே திமுகவில் சேர்ந்தார்.

தூத்துக்குடியில் இயங்கி வந்த பிரபலமான மதுரா கோட்ஸ் மில்லின் தொழிற்சங்க தலைவரானார். 1975ம் ஆண்டு தூத்துக்குடி நகரின் வட்டப்பிரதிநிதியாக முதல் முறையாக திமுகவில் பதவி பெற்றார்.

கடந்த 1977ம் ஆண்டு பிரிக்கப்படாத நெல்லை மாவட்ட பிரதிநிதியாக என். பெரியசாமி நியமிக்கப்பட்டார்.

பின்னர் திமுக தலைமை அவரை தலைமைபொதுக்குழு உறுப்பினராக நியமித்தது.

1982ம் ஆண்டு முதல் 1987ம் ஆண்டு வரை தலைமை பொதுக்குழு உறுப்பினராக இருந்தார். இதற்கிடையே நெல்லைமாவட்டத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் பிரிக்கப்பட்டு தனி மாவட்டமானது.

இதைத் தொடர்ந்து 1987ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்ட செயலாளராக பெரியசாமி நியமிக்கப்பட்டார். அதுமுதல் இன்று வரை 30 ஆண்டுகள் இறக்கும் வரை தூத்துக்குடி மாவட்ட திமுக ெசயலாளராக பதவி வகித்துள்ளார்.


.

மூலக்கதை