ஜனாதிபதி வேட்பாளர் யார்? எதிர்க்கட்சிகள் இன்று முடிவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஜனாதிபதி வேட்பாளர் யார்? எதிர்க்கட்சிகள் இன்று முடிவு

புதுடில்லி: ஜூலையில் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் பாஜகவிற்கு போட்டி வேட்பாளராக, எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்த ஆலோசனையும்,  வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்ய  காங்கிரஸ்  தலைவர் சோனியா இன்று முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டம் பார்லிமென்ட் வளாகத்திலுள்ள நூலக கட்டிடத்தில் நடந்து இன்று மதியம் ஒரு மணிக்கு மதிய உணவுடன் நடந்து வருகிறது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முக்கிய கட்சிகளின் நிர்வாகிகள் சோனியாவின்  அழைப்பை ஏற்று கலந்து கொண்டனர். சோனியா வீட்டில் நடைபெறுவதாக இருந்த இந்தக் கூட்டம் பின்பு பார்லிமென்ட் வளாகத்திற்கு மாற்றப்பட்டது.

இந்த ஆலோசனை கூட்டத்தில்  இடதுசாரிகள் சார்பாக  சீதாராம் யெச்சூரி, டி. ராஜா, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ராஷ்டிர ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். திமுக சார்பில் எம். பி கனிமொழி கலந்து கொண்டார்.

 

இந்த விருந்திற்கு பா. ஜ. வை கடுமையாக எதிர்த்து வரும் டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை.   பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. ஆனால் அவர் இதில் கலந்து கொள்ள போவதில்லை என தெரிவித்திருந்தார்.

இந்த கூட்டம் மதிய உணவுடன் பிற்பகல் 1 மணிக்கு ஆரம்பமானது. அதற்கு முன்பே பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் காலை 11  மணி முதல் கிளம்பி சென்றார்கள்.


  காங்கிரஸ் , தேசிய வாத காங்கிரஸ் , ஜனதா தளம் உள்பட அனைத்துக் கட்சிகளின் சார்பாக பொது வேட்பாளரை நிறுத்தப் போவதாக பேசி வருகின்றனர். மகாத்மா காந்தியின் பேரனும் முன்னாள் மேற்கு வங்க ஆளுநருமான  கோபால கிருஷ்ண காந்தியை நிறுத்த வேண்டுமென  மம்தா பானர்ஜி விருப்பம் தெரிவித்து பேசினார்.

காங்கிரஸ் சார்பில் தலித் பெண் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று கூறி  முன்னாள் சபாநாயகர் மீரா குமாரை முன் மொழிந்து பேசி வருகின்றனர். இதில் ஜனாதிபதி வேட்பாளராக யாரை நிறுத்துவது என்ற முடிவு எடுக்கப்படுகிறது.



ஆலோசனைக் கூட்டம் நடந்து வரும் நிலையில் நேற்று ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் பேசிய பிரணாப் முகர்ஜி, ‘மீண்டும் ராஷ்டிரபதி பவனுக்கு திரும்பும் எண்ணமில்லை. ஜனாதிபதி  போட்டியில் பங்கேற்கும் எண்ணமுமில்லை.

இன்னும் இரண்டு மாதங்களில் எனது பணி நிறைவு பெற இருக்கிறது. ஜூலை 25ம் தேதி புதிய ஜனாதிபதி பொறுப்பேற்க உள்ளார்.

என்னுடன் சேர்ந்து பணியாற்றிய அதிகாரிகளை, அவர்கள் சார்ந்த அமைச்சகங்ளுக்கும் துறைகளுக்கும் திரும்ப அனுப்புகிறேன்’ என பேசியிருக்கிறார். காங்கிரஸ் தலைமையில் நடைபெறும் இந்தக்  கூட்டத்தை பாஜக உன்னிப்பாக கவனித்து வருகிறது.

தற்போது ஆளும்  தேசிய ஜனநாயக கூட்டணி  48. 5 சதவிகிதம் வாக்குகளை வைத்திருக்கிறது. சமீபத்தில் நடந்து முடிந்த  பஞ்சாப் , கோவா , உ. பி உள்பட 5  மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக அமோக வெற்றி  பெற்றதால் பாஜகவின் பலம் கூடியிருக்கிறது.

ஆதலால் பாஜகவை விட கூடுதல் வாக்குகளை பெற நாடு முழுவதிலும் பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களிலுள்ள தலைவர்களை அழைத்து பேசி வருகிறார்கள்.

.

மூலக்கதை