வண்ண பட்டுக்கூடு உற்பத்திக்கு... எதிர்பார்ப்பு! வழிகாட்டினால் விவசாயிகள் தயார்

தினமலர்  தினமலர்
வண்ண பட்டுக்கூடு உற்பத்திக்கு... எதிர்பார்ப்பு! வழிகாட்டினால் விவசாயிகள் தயார்

உடுமலை: பல்வேறு காரணங்களால் கைவிடப்பட்ட வண்ண பட்டுக்கூடு உற்பத்தியை, மீண்டும் துவக்க மத்திய பட்டு வாரியம் உதவ வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் உடுமலை, பொள்ளாச்சி, கோபி, பழநி, சேலம், தருமபுரி மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், மல்பெரி சாகுபடி செய்யப்பட்டு, வெண்பட்டுக்கூடுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இளம்புழு வளர்ப்பு மற்றும் பட்டுக்கூடுகள் உற்பத்தி என இரண்டு பிரிவுகளாக விவசாயிகள் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். ரசாயனங்கள் பயன்படுத்தாமல் மல்பெரி சாகுபடி, தரமான கூடுகள் உற்பத்தி, மகசூல் அதிகரிப்பதற்கான வழிமுறைகள், உட்பட பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் நோய் கட்டுப்பாடு குறித்து மத்திய பட்டு வாரியத்தினர் விவசாயிகளுக்கு வழங்கி வருகின்றனர். வண்ண பட்டுக்கூடுகடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு, பட்டுவளர்ச்சித்துறை சார்பில் விவசாயிகளிடையே வண்ண பட்டுக்கூடு ரகத்தை அறிமுகப்படுத்தியது. புழுவளர்ப்பு மனையில் வளர்க்கப்படும், பட்டுப் புழுக்களுக்கு நான்கு பருவங்களாக உணவுகள் வழங்கப்படுகிறது. அதில் நான்காவது பருவத்தில் வழங்கப்படும், மல்பெரி இலைகளை இயற்கை முறையில் தயாரிக்கப்படும் சாயங்களில் முக்கி எடுத்து உணவாக கொடுக்கப்படுகிறது. இதனை சாப்பிடும் புழுக்கள் கட்டும் கூடுகள், வண்ண கூடுகளாக கிடைக்கும். மஞ்சள், பச்சை, ஊதா உட்பட பல்வேறு வண்ணங்களில், கூடுகள் உற்பத்தி சோதனை முயற்சி அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. விலை அதிகம்இவ்வாறு பல்வேறு வண்ணங்களில் உற்பத்தி செய்த வண்ண கூடுகளுக்கு, வெண்பட்டுக்கூடுகளை விட கிலோவுக்கு, 50 ரூபாய் வரை அதிகமான விலை கிடைத்து வந்தது. இதனால், விவசாயிகளின் வருவாயும் கணிசமாக உயர்வதற்கான வாய்ப்பும் இருந்தது. இத்தொழில்நுட்பத்தால் பட்டு நுால்களுக்கு தனியாக சாயமேற்ற வேண்டிய அவசியம் இல்லாததுடன், இயற்கையாகவே கலர் நுால் கிடைத்து வந்ததால் ரீலர்கள், வியாபாரிகள் மற்றும் விவசாயிகளிடையே அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால், வண்ண பட்டுக்கூடு உற்பத்தி கைவிடப்பட்டது. மீண்டும் விவசாயிகள் வண்ண கூடுகளை உற்பத்தி செய்ய பட்டுவளர்ச்சி ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் முயற்சி செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நடைமுறை சிக்கல்உடுமலை மத்திய பட்டு வாரிய ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி புனிதவதி கூறியதாவது;விவசாயிகள் உற்பத்தி செய்த வண்ண பட்டுக்கூடுகள் அரசு கொள்முதல் மையங்களில் விற்பனை செய்ய முடியவில்லை. இதனால், நெசவுத்தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களே ஒப்பந்த முறையில் நேரடியாக விவசாயிகளிடம் வந்து கொள்முதல் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. வண்ண கூடுகளில் இருந்து பிரித்தெடுக்கப்படும் நுால்கள், சாயமேற்றப்பட்ட நுால்களைவிட நிறம் குறைவாகவும், இந்த நுால்களில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட சேலைகளில், கலரின் தன்மை விரைவாகவே குறைந்து விடுவதாக தனியார் நிறுவனத்தினர் தெரிவித்தனர். இந்நிலையில், வண்ண கூடுகளை கொள்முதல் செய்வதை நிறுவனங்கள் தவிர்த்ததால், உற்பத்தியும் மெல்ல குறைந்து தற்போது முற்றிலும் முடங்கியுள்ளது. தரமான வண்ண கூடுகள் உற்பத்தி செய்வதற்கான இயற்கை சாயங்கள் குறித்த ஆராய்ச்சிகளை, பட்டு வளர்ச்சி ஆராய்ச்சித்துறை மேற்கொண்டு வருகிறது. மீண்டும் இவ்வகை கூடுகள் உற்பத்திக்கு வாய்ப்புள்ளது. இவ்வாறு விஞ்ஞானி புனிதவதி தெரிவித்தார். பிற வாய்ப்புகள்உடுமலை பகுதியில், வறட்சியால், பட்டுக்கூடு உற்பத்தி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புழு வளர்ப்பு மனை கழிவுகளிலிருந்து மண் புழு உரம் தயாரித்தல், மல்பெரி இலைகளிலிருந்து மதிப்பு கூட்டு பொருள் உற்பத்தி ஆகியவற்றுக்கும், மானியம் மற்றும் இலவச பயிற்சிகளை, மத்திய பட்டு வாரியமும், மாநில அரசின் பட்டு வளர்ச்சி துறையும் இணைந்து வழங்கினால், விவசாயிகளுக்கு வருவாய் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பட்டுக்கூடு உற்பத்தி பாதிக்கப்படும் போது, இத்தகைய தொழில்கள் விவசாயிகளுக்கு கைகொடுக்கும் வாய்ப்புள்ளது.

மூலக்கதை