ஜனாதிபதி தேர்தல் குறித்து நாளை ஆலோசனை: எதிர்கட்சி தலைவர்களுக்கு சோனியா விருந்து

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஜனாதிபதி தேர்தல் குறித்து நாளை ஆலோசனை: எதிர்கட்சி தலைவர்களுக்கு சோனியா விருந்து

புதுடெல்லி: ஜனாதிபதி தேர்தலில், ஆளும் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக, பொது வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நாளை விருந்து வைக்கிறார்.

இதில் பங்கேற்க டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், வருகிற ஜூலை மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.   தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளரை நிறுத்த பாஜ முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், பாஜவுக்கு எதிரான மனநிலையில் உள்ள கட்சிகளை ஒருங்கிணைத்து பொதுவேட்பாளரை நிறுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதற்கான முயற்சியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஈடுபட்டுள்ளார்.



இதுதொடர்பாக எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ள சோனியா, அக்கட்சி தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். கடந்த வாரம் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லியில் உள்ள சோனியா இல்லத்தில் அவரை சந்தித்து பேசினார்.

இதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், திமுக செயல் தலைவர் மு. க. ஸ்டாலின், ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத், சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிட்டோரிடம் ஏற்கனவே ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு டெல்லியில் நாளை விருந்துக்கு சோனியா ஏற்பாடு செய்துள்ளார். இந்த விருந்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மம்தா பானர்ஜி, லாலு பிரசாத், சீத்தாரம் யெச்சூரி உள்ளிட்டோர் இதில் பங்கேற்கின்றனர்.

இந்த விருந்தில் பங்கேற்க டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. தமிழகத்தில் திமுகவுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.   ஜனாதிபதி தேர்தல் குறித்து தன்னுடைய முடிவை கெஜ்ரிவால் இதுவரை தெரிவிக்காததால், அவர் புறக்கணிக்கப்பட்டுள்ளார்.

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இந்த விருந்தில் பங்கேற்கவில்லை. தனக்கு பதிலாக பிரதிநிதியை அனுப்பி வைப்பதாக அவர் கூறியுள்ளார்.

திமுக சார்பில் மூத்த தலைவர் ஒருவரும் இதில் பங்கேற்க உள்ளார்.

இந்த விருந்து நிகழ்ச்சியின்போது, ஜனாதிபதி தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜவுக்கு எதிரான மெகா கூட்டணிக்கு இது அச்சாரமாக இருக்கும் என தெரிகிறது.

இதேபோல், திமுக தலைவர் கருணாநிதியின் சட்டமன்ற வைர விழா ஜூன் 3ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. இதேபோல், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, சீத்தாராம் யெச்சூரி, நிதிஷ்குமார், லாலு பிரசாத் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்க்கட்சிகள் சார்பில், ஜனாதிபதி வேட்பாளராக மகாத்மா காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி, முன்னாள் சபாநாயகர் மீரா குமார் ஆகியோர் பெயர்கள் பரிசீலனையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை