ஜெர்மனி, ரஷ்யா உள்ளிட்ட 4 நாடுகளில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஜெர்மனி, ரஷ்யா உள்ளிட்ட 4 நாடுகளில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம்

புதுடெல்லி: ஜெர்மனி, ரஷ்யா உள்ளிட்ட 4 நாடுகளில், பிரதமர் நரேந்திர மோடி வருகிற 29ம் தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின்போது, இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறு, அந்நாடுகளை சேர்ந்த நிறுவனங்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி, அரசுமுறை பயணமாக ஜெர்மனி, ரஷ்யா, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு செல்கிறார். வருகிற 29ம் தேதியன்று ஜெர்மனி செல்லும் மோடி, அந்நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலை சந்தித்து, இருநாட்டு உறவுகள் குறித்து பேசுகிறார்.



மேலும், ஜெர்மனியை சேர்ந்த பிரபல தொழில் நிறுவனங்களை சேர்ந்த உயர் அதிகாரிகளை மோடி சந்திக்கிறார். இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு அவர்களுக்கு அழைப்பு விடுக்கிறார்.

30ம் தேதியன்று ஸ்பெயின் நாட்டுக்கு செல்லும் மோடி, அந்நாட்டு அதிபர் மரியானோ ரஜோய்யை சந்திக்கிறார். வர்த்தகம், முதலீடு குறித்து இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

இதையடுத்து, ஜூன் 1ம் தேதியன்று ரஷ்யா செல்லும் பிரதமர் மோடி அங்கு 2 நாட்கள் தங்கியிருக்கிறார்.

செயின்ட் பீட்டர்ஸ்பெர்க்கில் நடைபெறவுள்ள இந்தியா-ரஷ்யா வருடாந்திர மாநாட்டில், ரஷ்ய அதிபர் புதினுடன் பங்கேற்கிறார்.

இருநாடுகள் இடையேயான பல்வேறு ஒப்பந்தங்கள் குறித்து இம்மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளன. ரஷ்ய பயணத்தை முடித்துக்கொண்டு பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் செல்கிறார் மோடி.

அங்கு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானை சந்தித்து இருநாட்டு உறவுகள், வர்த்தகம் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்துகிறார்.


.

மூலக்கதை