ரூ.600 கோடி பினாமி சொத்துக்கள் பறிமுதல் : வருமான வரித்துறை அதிரடி

தமிழ் முரசு  தமிழ் முரசு
ரூ.600 கோடி பினாமி சொத்துக்கள் பறிமுதல் : வருமான வரித்துறை அதிரடி

புதுடெல்லி: பினாமி சட்டத்தின்கீழ், நாடு முழுவதும் ரூ. 600 கோடி சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.   முறைகேடாக சேர்க்கும் பணத்தை கொண்டு பினாமி மூலம் சொத்துக்கள் வாங்குவது அதிகரித்துள்ளது. இதை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கடந்த ஆண்டு நவம்பர் 1ம் தேதியில் இருந்து, பினாமி சொத்து பறிமுதல் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. பினாமி பெயரில் அசையும், அசையா சொத்துகளை பரிமாற்றம் செய்வது சட்டத்துக்கு புறம்பானது.

இவ்வாறு சொத்துக்கள் சேர்த்திருப்பது தெரியவந்தால், அதிகபட்சம் 7 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்கும். சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படும்.



இந்நிலையில், கடந்த மே 23ம் தேதி வரை 400க்கும் மேற்பட்ட பினாமி பரிமாற்றம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வருமான வரித்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கருப்பு பணத்தை மீட்கும் வகையில் புதிய பினாமி சட்டத்தின் கீழ், 400க்கும் மேற்பட்ட பினாமி சொத்து பரிமாற்றங்களை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுமார் 240 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் சந்தை மதிப்பு ரூ. 600 கோடி.



இதில், கொல்கத்தா, மும்பை, டெல்லி, குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய இடங்களில் ரூ. 530 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மும்பையில் சில அசையா சொத்துக்கள் போலி நிறுவனங்கள் பெயரில் உள்ளன.

ராஜஸ்தானில் ஒரு நகைக்கடை அதிபர்,  தன்னிடம் பணிபுரிந்த முன்னாள் ஊழியர் பெயரில் பல கோடி மதிப்புள்ள 7 அசையா சொத்துக்களை பதிவு செய்திருந்தார்.

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள டிரைவர் பெயரில் ரூ. 7. 7 கோடி சொத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

.

மூலக்கதை